புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கீழவேகுப்பட்டி கிராமத்தில் ஏகாளி அம்மன், சின்னகருப்பர் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கீழவேகுப்பட்டி மற்றும் பொன்.உசிலம்பட்டி கிராம மக்களால் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 600 காளைகள் கலந்து கொண்டன. மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை ஏராளமான வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றது. காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த பார்வையாளர் வேகுப்பட்டி ஏனமேடு பகுதியை சேர்ந்த தொழிலாளியான சிங்கராவணன் (வயது 42) என்பவரை மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி வலையப்பட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மஞ்சுவிரட்டை காண பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளானவர்கள் கண்டு களித்தனர். புதுக்கோட்டையில் இந்த ஆண்டின் கடைசி மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களில் ஜல்லிக்கட்டு 47 இடங்களிலும், வடமாடு மஞ்சுவிரட்டு 17 இடங்களிலும், மஞ்சுவிரட்டு 7 இடங்களிலும் என மொத்தம் 71 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதில் மஞ்சுவிரட்டுகளில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் ஒருவர், பார்வையாளர்கள் 3 பேரும், ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவரும் என மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்றுடன் நிறைவு பெற்றது. இனி மாவட்டத்தில் அடுத்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்