தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதும், அதனால் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் விரைவில் குடிநீர் தட்டுபாடுகளுக்கு நிரந்தர தீவுகாணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுபாட்டுக்கு தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளில் பேயாடிக்கோட்டை, செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கூறினர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறினர்.






இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாகவே தொடர்கிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தவும், கடலோரப் பகுதிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலமே லாரி தண்ணீர் விநியோகத்துக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நிரந்தரத் தீர்வுக்கும் நடவடிக்கை தேவை என தெரிவித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறியது.. இந்த 20 கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு  கோடைக்காலங்களில் மட்டும் இல்லாமல் பல சமயங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுக்குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகையால் தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஓவ்வொரு முறையும் மக்கள் போராட்டம் நடத்துவதும், அதிகாரிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. எப்போது பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்கும் என்பது கேள்வி குறியாக உள்ளது.  









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண