புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பேரூராட்சி பஸ் நிலைய கட்டிடம் சிதிலமடைந்ததையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு, அவற்றை இடித்து அப்புறப்படுத்திவிட்டு 2017-18-ம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 18 கடைகள் கட்டப்பட்டன. அப்போது பழைய கடைகளின் ஏலதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பஸ் நிலைய வளாகத்திலேயே அவர்களுக்கு பேரூராட்சி சார்பில் 16 தற்காலிக கடைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டது. ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் வாடகையாக நிர்ணயித்த அதே தொகையே தற்காலிக கடைகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு அட்வான்ஸ் தொகை ரூ.10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்பேரூராட்சி நிர்வாகத்திடம் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கடைகளை தங்களுக்கே ஒதுக்கி தருமாறு பழைய ஏலதாரர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலத்தில் விடவேண்டும் என வலியுறுத்தி தனிநபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே கடை வைத்திருந்த வாடகை தாரர்களுக்கும் கடை தர முடியாமல், பொது ஏலமும் விட முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டியே கிடந்தன. இதனால் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.




 

இந்நிலையில், 16 கடைகாரர்களும் தங்களுக்கே மீண்டும் கடைகளை ஒதுக்கி தர வேண்டும் என, மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே 18 கடைகளில் 16 கடைகள் நேற்று பொது ஏலம் விடப்பட்டது. இதில் 39 பேர் முன்பணம் செலுத்தி ஏலம் கேட்டனர். அப்போது ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கும் புதியதாக ஏலம் கேட்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் சமாதானம் ஏற்பட்டு ஏலம் நடந்தது. இதில் ஒவ்வொரு கடையும் குறைந்தபட்சம் மாத வாடகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஏலம் போனது. பஸ் நிலைய கடைகள் ஏலத்தையொட்டி கறம்பக்குடி பேரூராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் பேரூராட்சி பஸ் நிலைய கடைகள் ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பஸ் நிலைய கட்டிடத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.