அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் முதன் முதலாக டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி-கத்ரா, காந்திநகர்-மும்பை, சென்னை-மைசூரு இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் 18 ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ரயில் பெட்டிகள் தயாராகி வரும் நிலையில், சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள ரயில் பெட்டி பணிமனைகளில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பராமரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக, ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகளில் ரேக்குகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக நாடுமுழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் கடந்த மே மாதம் ஒரு ஆணை பிறப்பித்தது. இதில், அந்தந்த ரயில்வே மண்டலங்களில் வந்தே பாரத் ரெயிலை பராமரிப்பதற்காக, ரயில் பெட்டி பணிமனைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் 4 இடங்களில் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தெற்கு ரயில்வேயின் எல்லைக்கு உட்பட்ட சென்னையில் 6 ரேக்குகள், கோவையில் 3 ரேக்குகள், திருச்சியில் 2 ரேக்குகள், திருவனந்தபுரத்தில் 3 ரேக்குகள் என்று 14 ரேக்குகள் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சியில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் ஏற்கனவே 6 விரைவு ரயில் மற்றும் 15 பயணிகள் ரயில்களின் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.






இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனையை மேம்படுத்தி வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வகையில் 2 ரேக்குகளை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய 4 இடங்களில் அதிவேக ரயில்களின் பெட்டிகள் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த 4 இடங்களுக்கும் திருச்சியில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களின் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் தமிழகத்தில் இருந்து குறைந்தது 10 முதல் 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகம் வழியாக ஓடும் ரயில்கள் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் முன்மாதிரி மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் இதுக்குறித்து திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்ததாவது: அடுத்த ஆண்டு ஆகஸ்டு முதல் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, திருச்சியில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு மனையில் (கோச்சிங் டிப்போ) 2 ரேக்குகளை ரூ.2¼ கோடி செலவில் விரிவாக்கம் செய்து வருகிறோம். இதில் 2 வந்தே பாரத் ரயில்களை நிறுத்தி பராமரிக்க முடியும். இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் வழித்தடங்கள் குறித்து எந்த தகவல்களும் வரவில்லை என்றார்.