புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லையை சேர்ந்தவர் ரவி (வயது50). தி.மு.க. கிளை செயலாளரான இவர் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்க்க சென்றவர் கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதே கிராமத்தில் கறம்பக்குடி-பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து உறவினர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது அவர்களது உறவினர்கள், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் ரவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், குடும்பத்தினர், போராட்டக்காரர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே முள்ளூர் விலக்கில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் ரவியின் மரண வழக்கை சந்தேக மரணமாக இருப்பதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் விசாரிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 



 

மேலும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதேநேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ரவியின் உடலை வாங்குவதாக கூறிச்சென்றனர். இந்த மறியல் போராட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. இதனால் புதுக்கோட்டை-தஞ்சை மார்க்க சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. அந்த வழியாக செல்லக்கூடிய பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. போராட்டம் முடிந்ததும் போக்குவரத்து சீரானது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண