புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட வில்லாரோடை கிராமம் கத்தலூர் செல்லும் கோரையாற்றுப்பாலம் அருகே தொண்டைமான் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோரையாறு அருகே உள்ள இடங்கள், புதுவயல் நத்தம் பகுதி இடங்கள், மேய்ச்சல் தரிசு புறம்போக்கு இடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கர் அளவிற்கு வில்லாரோடையை சேர்ந்த 32 பேர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதில் அவர்கள் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து மின் மோட்டார்களை வைத்து விவசாயம் செய்தும், தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வளர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் கோரையாற்றின் அருகே ஆற்று புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள நபர்கள் கடந்த சில வருடங்களாக தங்களது ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் மணல் அள்ளி விற்பனை செய்த வகையில் பல லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது மணல் அள்ளி விற்பனை செய்தது தொடர்பாக அப்பகுதியினர் சிலரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.
மேலும் ஆத்திரமடைந்த வில்லாரோடையை சேர்ந்த பாக்கியம் மகன்கள் சுப்பிரமணி மற்றும் குமாரவடிவேல் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு மதுரை கிளை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று காலை வில்லாரோடை கிராமத்தில் விராலிமலை தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மாத்தூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு வந்த சில விவசாயிகள் தங்களது வயலில் உள்ள வரப்புகளை மட்டம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றியதை தடுக்க முயன்றனர்.
இந்நிலையில் அவர்களிடம் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என்று கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இன்று மாலை 5 மணி வரை சுமார் 7 ஏக்கர் அளவிற்கு விவசாய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் அங்கு விவசாய கிணறு மற்றும் போர்வெல்லில் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகளும் மின்வாரிய ஊழியர்களால் துண்டிக்கப்பட்டது. இதனால் இனறு வில்லாரோடை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாளை மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.