தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு கடந்த 3, 4-ந் தேதிகளில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது, “இந்த மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு பெருமைப்படும் வகையில் இருந்தது. நமது மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகம் எதுவும் இல்லை. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் பணி சிறப்பானதாகவே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கொலை வழக்குகளில் கொலையாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தல், பழைய வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிதல், போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.


போக்சோ வழக்குகளில் 2021 முதல் 2023-ம் ஆண்டில் இதுவரை 38 வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டில் இதுவரை 14 போக்சோ வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இந்த தண்டனையை பெற்றுத்தர போலீசார் குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ததன் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கொலை வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 29 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் இதுவரை 16 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழிவாங்குதல், சாதி, ரவுடி என்ற பிரிவில் கொலை வழக்கு ஏதும் இல்லை. இந்த ஆண்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்கு எதுவும் இல்லை. கடந்த ஆண்டில் பொன்னமராவதி பகுதியில் நகை, பணத்திற்காக இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு குற்ற பத்திரிக்கை பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஆதாய கொலை வழக்கு எதுவும் இல்லை. முதல்-அமைச்சரின் முகவரி திட்டம், வாரத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் நமது மாவட்டத்தில் அதிக புகார் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டிருந்தன. இதில் ஏ, பி, சி என 3 வகையாக பிரித்து மதிப்பீடு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக சதவீதம் வழங்கப்பட்டிருந்தது. இதிலும் நமது மாவட்டத்திற்கு பெருமை தான் கிடைத்தது. 


மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடிகள் காவலில் வைக்கப்பட்டு, 11 பேர்களின் மீது அனைத்து சட்ட அம்சங்களிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக பழிவாங்கும், ரவுடி கொலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் (2023) இதுவரை 80 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 126 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 496 ½ கிலோ கஞ்சா மற்றும் 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் சாராயம், சட்டவிரோத மது, கஞ்சா, குட்கா, லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட 8531085350 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல்கள் அதிகம் வருகிறது. இதன் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த செல்போன் எண்ணில் தகவல் அளிக்கலாம்” என தெரிவித்தார்.