திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டபத்தில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சக ஆசிரியர்களை கொண்டாடுவோம் புத்தகம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் மனசு பெட்டியை அமைச்சர்கள் திறந்து அதில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை படித்து பரிசீலனை செய்தனர்.
இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறியது.. ”ஆசிரியர்கள் இல்லை என்று சொன்னால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. நான் இரண்டாவது முறையாக அமைச்சர் ஆகி விட்டேன். எனது கணக்கு ஆசிரியரை பார்த்தேன். உடனே காரை விட்டு இறங்கி அவரை வணங்கினேன். எப்படி இருக்கிற நேரு என்று கேட்டார். நான் மந்திரியாக இருக்கிறேன், எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்களே என்று கேட்டேன். அன்று போல் தான் இன்றும் இருக்கிற நேரு என ஆசிரியர் பேசினார். ஜனாதிபதியாக கூட இருந்தாலும் அவர்கள் கற்றுத் தந்த ஆசிரியர் வரும்போது எழுந்து நின்று வணங்கும் ஒரே பதவி இந்த ஆசிரியர் பதவி மட்டும் தான். தமிழ்நாட்டில் ஆசிரியர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் தலைவர் கலைஞர் என்பது நான் நன்றாக அறிவேன்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்களை மதித்து தான் ஆக வேண்டும். இல்லையென்றால் வளர முடியாது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது எனது தம்பிக்கு இன்ஜினியரிங் சீட் கேட்டு சென்றேன். நீ திமுக காரன் நீ எப்படி இங்கு வந்தாய் என வெளியே அனுப்பி விட்டார்கள். அதனால் ஒரு கல்லூரியை கட்ட வேண்டும் என்று கட்டினேன். அதனால் வழக்கு வந்தது. அதற்காக ஜெயிலுக்கெல்லாம் போனேன். படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நான் இன்றைக்கு தான் தெரிந்து கொண்டேன். காலம் கடந்து விட்டது. பல சங்கடங்கள் இருக்கிறது. பத்தாண்டு காலம் கழித்துவிட்டு சென்று விட்டார்கள். எவ்வளவு திறமையாக ஆட்சி நடத்தினாலும் அரசாங்கத்தின் கஜானா இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஆசிரியர்கள் திரும்ப பணிக்கு சென்றது மகிழ்ச்சி. நான்கு நாட்களாக மகேஷ் முகத்தில் சிரிப்பு இல்லை. ஆசிரியர் போராட்டம் வாபஸ் பெற்ற அன்று CM முன்பு அவர் வாகனத்திலே சந்தோஷப்பட்டார்” என தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது..
”ஆசிரியர்களுடன் அன்பில்” எனும் நிகழ்வின் மூலம் ஒவ்வொரு மாவட்டமாக ஆசிரியப் பெருமக்களைச சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளைக் கேட்டறிந்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக எனது சொந்த மாவட்டமான திருச்சியில் ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வை நடத்துவதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அடங்கிய “ஆசிரியர் மனசு” பெட்டியை என்னிடம் ஒப்படைத்து, “சக ஆசிரியர்களைக் கொண்டாடுவோம்” எனும் நூலையும் வெளியிட்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆசிரியர்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியர்கள் ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் புரிந்து கொண்டு தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம். சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வித் துறையின் மீது ஏற்பட்ட திருஷ்டிதான் கடந்த வாரம் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். நீங்கள் ஒவ்வொருவரும் போராட்டம் நடத்தும் போதெல்லாம் எங்களை மார்பில் உதைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஒரு தாய் வயிற்றில் குழந்தை இருக்கும்போது அந்த குழந்தை எட்டி உதைப்பதில் ஏற்படும் வலியைப் போல நீங்கள் உதைக்கும் வழி எங்களுக்கு ஏற்படுகிறது. பள்ளிக்கல்வித் துறைக்காக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் 32, அவற்றில் ஏறக்குறைய 29 வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். போராடிய ஆசிரியர்களுக்கு ஆதரவாக வந்து பேசிய பலரும் ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்தனர். அதை தவறென சொல்லவில்லை. ஆனால், உண்மை நிலை எங்களுக்குத்தான் தெரியும். நம் இருவருக்கும் இடையே உள்ளே நுழைந்து நம்மை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு பதில் ஒன்றுதான், அடித்தாலும் பிடித்தாலும் நாம் அண்ணன், தம்பிகள். எங்களுடைய கரத்தை நீங்கள் வலுப்படுத்துங்கள். உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். திருச்சியில் உள்ள ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை தான் ஒட்டுமொத்த தமிழகத்தில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். அதில் அவர்கள் வைத்த கோரிக்கையில் EMIS பதிவேற்ற பணிச்சுமையை நீக்க வேண்டும் என்பதுதான். அந்த கோரிக்கையை இன்று பள்ளிக்கல்வித்துறை ஏற்று அந்த பணிச்சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.
மேலும் ஆசிரியர்களின் பணி சுமை குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள ஆன்லைன் டெஸ்ட் முறையை ரத்து செய்து மாணவர்கள் நலன் கருதி மீண்டும் பழைய தேர்வு முறையே தொடர வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளோம்” எனக் கூறினார். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் ஆசிரியர்களுக்கு உணவு பரிமாறி ஆசிரியர்களுடன் உணவு அருந்தினார்.