பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது தவணையும் பயனர்களுக்கு வரவு வைக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு முழுவதும் தகுதிவாய்ந்த ஒரு கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்படுவார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டு அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டது.


சரியான ஆவணங்களை இணைக்காதவர்கள், பொருளாதாரத் தகுதிகளுக்குள் வராதவர்கள் என சுமார் 56 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவரகள் மீண்டும் விண்ணப்பிக்கவும், அதேபோல் விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு அதற்கான ரசீதுகள் வழங்கப்படுகிறது. தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தில் பார்க்கும் போது இன்னும் தரவுகள் பதிவேற்றப்படவில்லை என்று வருவதாக அப் பெண்கள் கூறுகின்றனர். மேல்முறையீடு செய்து பல நாள்கள் ஆகியும் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.




இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்ய சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அப்போது அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திடீரென தாலுகா அலுவலகத்தின் நிர்வாகத்தை கண்டித்து புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தாசில்தார் ராமசாமி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். -அப்போது பெண்கள், தாங்கள் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்வதற்காக பல நாட்களாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு எங்களது விவசாய பணி, 100 நாள் வேலை ஆகிய வருமானம் தரக்கூடிய வேலைகளை விட்டுவிட்டு இங்கு வருகிறோம்.


ஆனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தால் இ-சேவை மையம் செயல்படவில்லை. அப்படியே இ-சேவை மையத்தில் ஆட்கள் இருந்தாலும், இணைய சேவை கிடைக்கவில்லை என்று கூறி எங்களை அதிகாரிகள் அலைய விடுகிறார்கள். எனவே மேல்முறையீடு செய்ய வந்த பெண்களிடம் உரியவாறு மேல் முறையீடு செய்து உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத தகுதி உடைய பெண்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மறியலை ைகவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.