தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரம். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, போக்குவரத்தை நிர்வகிப்பது மற்றும் விதிமீறல்களைக் கண்காணிப்பது நகர அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது. அதைச் சமாளிக்க, மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு புதிய போக்குவரத்து விதிகளையும் அபராதங்களையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பள்ளி வேன், கல்லூரி வாகனங்கள், அனைத்தையும் தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சரியான முறையில் வாகனங்களை பராமரிக்க வேண்டும், அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஆவணங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும் என அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் பல இடங்களில் வாகனங்கள் சரியான பராமரிப்பு இல்லாமலும், அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாகவும், குறிப்பாக பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் விதிமுறைகளை மதிப்பதில்லை ,அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்கிறார்கள். இதனால் சில நேரங்களில் விபத்துக்கள் நடக்கிறது, ஆகையால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே இருந்து புகார்கள் வந்ததை அடுத்து, திருச்சி மத்திய மண்டலத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுபடி, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) பிரபாகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) ராஜாமணி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பெரம்பலூர் பகுதிகளில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான கார் மற்றும் வேன்களில் குழந்தைகளை பள்ளிக்கு மாத வாடகைக்கு அழைத்து சென்று வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத பயணிகள் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றி வருவது கண்டறியப்பட்டு, அந்த 3 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தவிர தகுதி சான்று புதுப்பிக்கப்படாத லாரியும், வரி செலுத்தாத சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கூறுகையில், தனியாருக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்குவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. இது சம்பந்தமாக தினசரி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேபோல் துவாக்குடி மற்றும் நவல்பட்டு, திருவெறும்பூர் பகுதியில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு குறைபாடு மற்றும் சாலை விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட 12 வாகனங்களை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பு குறைபாட்டுடன் இயங்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.