தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைதாரர் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போர் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 416 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பொருட்கள் 1,225 ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கி. (அரை கிலோ), நெய் 100 கிராம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு 500 கிராம் மற்றும் முழுக்கரும்பு மற்றும் ஒரு துணிப்பை ஆகிய பொருட்கள் இடம்பெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும்,மேலும் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கு ஏதுவாக 750 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம், போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்படும். மேலும் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார். தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கண்டிப்பாக வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் இவ்வித சிரமமின்றி நியாயவிலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டைதாரர் உடல்நிலை சரியில்லாமலும், வயதானவர்களாக இருந்தால் அவர்களின் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவ தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது ஆகையால் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில், சமூக இடைவெளி விட்டு பொருட்கள் பெறவேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, செல்போன் எண் 9445045618 தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.