தமிழர் திருநாளான பொங்கலில் மதங்களுக்கும், சாதிகளுக்கும் என்றுமே முக்கியத்துவம் தரப்பட்டதில்லை. எப்போதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவே இருக்கிறது. நமக்கு உணவினை படைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவே பொங்கல் இருக்கிறது. சாதி, சமயம் மறந்து இந்த விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெருவிழாவாக நடத்தப்படுகிறது. சில ஊர்களில், ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து, தமிழர் திருநாளை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் தேவாலயங்களில் பொங்கல் விழா வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படும். குழந்தைகள், இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரிகளில் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் புதுப்பானை வைத்து புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். உழைத்துக் களைத்து ஓய்ந்து போன உழவன் தன் பயிர்த்தொழில் செழிக்க ஒத்துழைத்த கதிரவனுக்கும், காளைகளுக்கும் நன்றி பாராட்டும் பொருட்டு உறவுகளோடு ஒருங்கிணைந்து நடத்தும் பண்பாட்டு சமத்துவ விழாவே பொங்கல் விழா என்று பொங்கல் உரை நிகழ்த்தினார். விழாவில் உரியடி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, சிலம்பாட்டம், சேவல் சண்டை, கயிறு இழுத்தல், மாணவ, மாணவிகளின் நடனம் என்று பண்பாட்டைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் வரவேற்புரை வழங்கினார். துணைமுதல்வர் முனைவர் து.பிரசன்னபாலாஜி விழாவை ஒருங்கிணைத்து நன்றியுரை நல்கினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.