தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (15-ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நமது நினைவுக்கு வருவது செங்கரும்புதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடித்து சுவைப்பதில் தனி பிரியம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே காந்தி மார்கெட் பகுதி களைகட்டத் தொடங்கியது. 


இங்கு  பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கரும்பு, மஞ்சள், வெல்லம், மண் பானைகள் மற்றும் காய்கறிகள் வாங்கி செல்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கடந்த வாரமே வந்து குவியத்தொடங்கியது. இந்நிலையில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று காலை முதல் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.  எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது. மாநகர போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 




மேலும், செங்கரும்புகள் திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலை, கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம் ஆகிய பகுதியில் இருந்தும் கரூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 


குறிப்பாக தல பொங்கல் பண்டிகை கொண்டாடும் தம்பதியருக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். மேலும் பொங்கல் படையலில் முக்கிய இடம்பிடிக்கும் வாழை இலை, பழம், தேங்காய், இஞ்சி விற்பனையும் களைகட்டியது.


திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்கப்படும் பொருள்களின் விலை நிலவரம்.. 


பொங்கல் பானை ரூ.300 முதல் ரூ. 1000 வரையும், செங்கரும்பு 10 கரும்புகொண்ட ஒரு கட்டு ரூ.350 வரையிலும், ஜோடி ரூ. 100 க்கும், மஞ்சள் கொத்து ரூ.50 க்கும், கூழைப்பூ ரூ. 30 க்கும், வாழைத்தார் ரூ. 500 முதல் 1000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதேபோல், பூக்கள் விலையும் 3 மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூ கிலோ ரூ.3000, முல்லைப்பூ ரூ.2,000, ஜாதிப்பூ ரூ.1,500, கனகாம்பரம் ரூ.1,000, செவ்வந்தி பூ ரூ.250, அரளிப்பூ ரூ.250, ரோஜா ரூ. 220, துளசி ஒரு கட்டு ரூ.60, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.60 என்ற விலையில் விற்கப்பட்டது.


மார்கழி மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.