பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக மன்னார்புரம் சர்வீஸ் ரோடு, தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக வில்லியம்ஸ்ரோட்டில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பார்வையிட்டு, தற்காலிக பேருந்து நிலையத்தை துவங்கி வைத்தார்கள். மேலும் காவல் துணை ஆணையர்கள், தெற்கு மற்றும் வடக்கு, கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார். 


மேலும், திருச்சி மாநகரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.




தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் நிறுத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது.


வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.


மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் அவர்களது அலுவலக Whatsapp No: 9626273399-க்கும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 12.01.2024ம்தேதி முதல் 17.01.2024ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.




தஞ்சாவூர் மார்க்கம்: 


டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் முத்தரையர் சிலை ,சேவா சங்கம் பள்ளி சாலை, அலெக்சாண்டிரியா சாலை,  பென்வெல்ஸ் சாலை,  சோனா, மீனா தியேட்டர் எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.


புதுக்கோட்டை மார்க்கம் : 


டி.வி.எஸ்.டோல்கேட்,  சுற்றுலா மாளிகை சாலை, பழைய ஹவுசிங் யூனிட்  , இலுப்பூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து, நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.


மதுரை மார்க்கம் :


மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது.


தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து, திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள், மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.




மேலும், மற்ற வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில், எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப் பேருந்துகள் (Circular Buses) இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்படாவண்ணம் காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சியின் மூலம் நிழற்குடை, குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் பயணிகளுக்கு தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி  பேசுகையில், பொங்கல் விழாவை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட, மக்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்களுடன் இணக்கமான முறையில் செயல்பட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், விழா காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் விபத்தை தடுக்கும்பொருட்டு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு முறையாக ஓய்வு வழங்க போக்குவரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் திருச்சி மாநகரில் விபத்துக்கள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சோதனை சாவடிகள் மூலம் முறையான வாகன தணிக்கை மேற்கொள்ளவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், வீதியை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பொங்கல் விழாவிற்காக திருச்சி மாநகரத்தில் சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தபட்டு உள்ளார் என தெரிவித்தார்கள்.


திருச்சி மாநகரத்தில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் ஒத்துழைத்தை நல்கி, சாலை விபத்துக்கள் இல்லாத பொங்கல் திருநாளை கொண்டாட திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.