திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்தவர் ரியாசின். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி மாலை தனது உறவினர்களான அனிஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பால்பண்ணை அருகே புதிய வெங்காயமண்டி சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், ரியாசின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த நபர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் ரியாசினிடம் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கேட்டுள்ளார். பின்னர் அவருடைய செல்போனையும், பின்னால் அமர்ந்திருந்த 3 பெண்களின் செல்போன்களையும் பறித்து கொண்டார். அவர்கள் செல்போன்களை திரும்ப கேட்டபோது, போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.



திருச்சியில் பெண்களிடம் செல்போன்களை பறித்த போலீஸ் கைது


இதனால் பாதிக்கப்பட்ட ரியாசின் மற்றும் 3 பெண்களும் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்போன்களை பறித்து சென்ற நபர், அரியமங்கலம் திடீர்நகரை சேர்ந்த மணிவேல் (வயது 39) என்பதும், இவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுவிட்டு வந்தபிறகு, கடந்த 9-ந் தேதி முதல் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு செல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். திருச்சியில் வாலிபர் மற்றும் பெண்களிடம் செல்போன் பறித்த வழக்கில் போலீஸ் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.