அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோவிலான இங்கு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த மாதம் 18ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் கோவில் வளாகத்தை தூய்மை படுத்துவதற்காக வந்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கேட் ஒன்று திறந்து இருந்தது கண்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் கருவறைக்கு முன் பக்கத்தில் இருந்த உண்டியலை காணாததால் மேலும் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகள் சுற்றுப்புறங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் உண்டியலை எங்கு தேடியும் கிடைக்காததால் உண்டியல் திருடுபோய் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்த கிராம மக்கள் சுற்றுவட்டாரத்தில் உண்டியலை தேடிப்பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பழைய பொன்னாற்றங்கரையில் உண்டியல் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே இருந்த பணத்தை மட்டும் மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு சில்லறைகளை அதிலேயே விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் தீவிரமாக விசாரித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டிக்ஸி வரவழைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியில் பலத்த மழை பெய்து இருந்ததால் மோப்பநாயால் செயல்பட முடியவில்லை. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து பக்தர்களின் வருகை இருந்து வந்த கோவில் என்பதால் உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கடந்த ஒரு மாதமாக அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கும் போது பின் கதவை உடைத்து திருடுவது, தண்ணீர் கெட்பதுபோல் நகையை திருடுவது, வழிபறி போன்ற குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுக்காகவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் சிசிடிவி கேமராகளை உடனடியாக அனைத்து பகுதிகளிலும் பொருந்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.