திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமணி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வாரம் தோறும் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். மேலும் மாநகர் பகுதிகளில் திருட்டு,கொலை, கொள்ளை சம்பவங்களை முற்றிலும் தடுத்திட 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாநகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளார். 


குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குக்கா, கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல் கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைளை எடுத்து வருகிறார். 




மேலும்,  திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் குட்கா, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தல் செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி கே.கே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தென்றல் நகர் அருகில் உள்ள ஒரு பெட்டிகடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின் பேரில் முசிறி, தின்னனூரை சேர்ந்த கார்த்திக் வயது 28 த.பெ.விஸ்வநாதன், என்பவரது கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலருடன் திருச்சி மாநகர காவல்துறையினர் சென்று சோதனை செய்ததில் கடையில் ஹான்ஸ்-31.500 கிலோ கிராம், கூல்லிப்-4 கிலோ, விமல் பான் மசாலா-4.500 கிலோ கிராம் மற்றும் v1 Tobaco- 2.430 கிலோ கிராம் என சுமார் ரூபாய் 30,300 மதிப்புள்ள  42½ கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், எதிரி கார்த்திக் என்பவரை கைது செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தும், மேற்கண்ட கடையின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.