திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று வீசிய மர்ம நபர்களை  காவல்துறையினர்  தேடி வருகின்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அடுத்த  நெடுங்கனூர் காட்டுப்பகுதியை ஒட்டிய சாலையோரம் நேற்று காலை ஏராளமான  குரங்குகள் இறந்து கிடப்பதாக திருச்சி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல்  கிடைத்தது. திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்  பேரில் வன சரகர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 6 பெண்  குரங்குகள் மற்றும் 18 ஆண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்து கிடந்தது.  இறந்து கிடந்த  குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி  வைத்தனர். மேலும் விசாரணையில் எங்கோ ஒரு பகுதியில் விஷமிகள் குரங்குகளுக்கு  விஷம் வைத்து கொன்று அதனை இந்த பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  வழக்கு பதிந்த வன பாதுகாப்பு அதிகாரிகள், குரங்கிற்கு விஷம் வைத்து கொன்றது  யார் என்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடி மற்றும்  சாலையோர கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.




இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட துரைசாமிபுரம் மரியம் நகர் பகுதியில்  திடீரென மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்து கிடந்தது குறித்து மரியம் நகர் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இறந்து கிடந்த நாய்களை  ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்திற்கு எடுத்துச்சென்றனர். அப்போது ஆய்வில் நாய்களுக்கு விஷம் நிறைந்த உணவு பொருட்களை கொடுத்து கொன்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக திருச்சி துரைசாமிபுரம் மரிய நகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதி மிகவும் அமைதியான பகுதியாக விளங்கி வருகிறது. மேலும் இங்கு  இருப்பவர்கள் அனைவருமே வசதி படைத்தவர்கள் என்றனர்.

 




 

மேலும் எங்கள் வீடுகளில் மிஞ்சுகின்ற உணவு பொருட்களை வீணாக்காமல், தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு அளித்து அதனை பாதுகாத்து வருகிறோம். கடந்த சில நாட்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து வருகிறது. இதுபற்றி நாங்கள்  மாநகராட்சி அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம் என்றனர். இதை கொள்ளையர்களின் கைவரிசையாகவே நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் எங்கள் பகுதிகளில் இரவு நேரத்தில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிவதால் இதுவரை கொள்ளை சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆகவே மர்ம நபர்கள் நாய்கள் இருந்தால் தொல்லை என்று கருதி நாய்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவே நினைக்கிறோம். ஆகவே காவல்துறையினர் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.