பிரதமர் மோடி நாளை - 20 ஆம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து, காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் செல்கிறார். 2.10 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.  மேலும், நாளை மறுநாள் 21 ஆம் தேதி காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் 10.25 முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். மேலும், 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.




இந்நிலையில் திருச்சிக்கு வருகை தர உள்ள பிரதமர் மோடி அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பிரதமர் மோடி  அங்கு சுமார் 40 நிமிடங்கள் கோயிலில் இருக்கிறார். பின்பு கோயில் பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிகிறது. கோயிலில் உழவார பணிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகே உள்ள அனைத்து கடைகளையும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை மதியம் 2.30 மணி வரை மூடபடும் என்று காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து புறப்பட்ட பிறகு கடைகளை திறந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்களது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். 


இதனை தொடர்ந்து நாளை (20.01.2024) பாரத பிரதமர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி இன்று (19.01.2024) காலை 06:00 முதல் நாளை (20.01.2024) பிற்பகல் 02:30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.