ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசின் முன்முயற்சி  ஜல் ஜீவன் திட்டம் ஆகும். மேலும்  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குழாய் நீர் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாககும்  கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதி குடும்பங்களுக்கு குழாய் நீர் கிடைக்கவில்லை என்று கூறினார். ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.3.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது . வரும் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசு இதை நோக்கி செயல்படும் என்று தெரிவித்தார். மேலும்  ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பழுப்புநிற நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி முறையில் நீரை பயன்படுத்துவது போன்றவற்றையும் இந்த திட்டம் செயல்படுத்தும் என்றார்.




மேலும் ஜல் ஜீவன் திட்டத்துக்கான 2021-22-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட்டார். அதில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக 50,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இது கடந்த ஆண்டைவிட 4.5 சதவீதம் அதிகம். 2020-21 ஜல் ஜீவன் மிஷனுக்காக ஒதுக்கப்பட்டது 11,000 கோடி. இதன் முக்கிய நோக்கம் 2024-க்குள் இத்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவது மட்டுமே என்றார். தமிழகத்தில் இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தபட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக 21-ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் 43 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டுள்ளது.



நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தை மாநில  அரசு செயல்படுத்தி வருகிறது. 2024-ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பான குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மத்திய மாநில அரசு மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் 2020 - 21ம் ஆண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 430 குக்கிராமங்களில் உள்ள 54209 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் ரூ.38.13 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் செயலாக்க அலுவலராகவும், ஜல் ஜீவன் மிஷன் ஒன்றினைந்த திட்டத்திற்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் செயலாக்க அலுவலராகவும் செயல்படுகின்றனர். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ஊராட்சி வாரியாக ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், உதவிப்பொறியாளரால் தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழியாக திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்படுகிறது. இதைத் தவிர்த்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவது தொடர்பாக திட்ட வரைவு தயார் செய்யும் பணியையும் ஊரக வளர்ச்சி முகமை தொடங்கி உள்ளது.