திருச்சி மாநகராட்சி தேர்தலில் ஓட்டு பதிவை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவும், கண்காணிக்கவும், 859 ஓட்டுச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. ஏற்கனவே வார்டுகள் வரையறை செய்யப்பட்டு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பட்டியலும் வார்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டு இயந்திரங்களும் பரிசோதனை முடிந்து தயார் நிலையில் உள்ளன.  இந்நிலையில் திமுக ,அதிமுக, பாஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல் நடத்துதல் ஆலோசனை என்று ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் தேர்தல் பணிகளை முழுமையாக பதிவு செய்து கண்காணிக்கும் வகையில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாடகை அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் தேர்தலுக்காக திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளில் 859 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடைபெறும் ஓட்டுப்பதிவு முழுமையாக கண்காணிக்கும் வகையிலும் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையிலும் ஓட்டுப்பதிவு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வெப் கேமரா, கண்காணிப்பு கேமராக்கள், நேரடி ஒளிபரப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இது தவிர ஓட்டு எண்ணிக்கை மையம், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், கட்டுப்பாட்டு அறை, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், என அனைத்து அலுவலகம் ஆகியவற்றில் வாடகை அடிப்படையில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும்  இதற்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.




மேலும் திருச்சி மாநகராட்சியில் நடைபெற் உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி மையம் அமைக்கும் இடங்களின் விபரங்கள் தயார் செய்யபட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் நேரத்தில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பதற்றமான வாக்குசாவடி மையத்தில் கூடுதல் பாதுக்காப்பு ஏற்படுத்த  பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளன.இதனை தொடர்ந்து சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடபட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.