திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும் கடந்த 2021-ம் ஆண்டு குடும்பப் பிரச்சினை காரணமாக 86 கொலை வழக்குகள், மதுபோதை தகராறு காரணமாக 70 கொலை வழக்குகள், நிலத் தகராறு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக 78 கொலை வழக்குகள் என மொத்தம் 254 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இது 2020-ம் ஆண்டு மத்திய மண்டலத்தில் நிகழ்ந்த 272 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 8 சதவீதம் குறைவாகும் என்றார். குறிப்பாக கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகைப் பொருட்களுக்கு எதிராக முழு வீச்சில் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதிலும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் அதிக அளவு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்யதுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விரைவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.




மேலும் சில கொலை குற்ற சம்பவங்களில் சிறுவர்களும், இளைஞர்களும் ஈடுபடுகின்றனர். பழைய குற்றவாளிகள் அவர்களை பயன்படுத்தும் நிலை உள்ளது. இருப்பினும், கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை குற்ற சம்பவங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கிராமந்தோறும் காவல் சிறுவர் மன்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. படிக்கும் நேரத்துக்கு பிறகு எஞ்சிய நேரங்களில் அவர்களை புத்தக வாசிப்பு, விளையாட்டு போன்ற நற்செயல்களில் ஈடுபடுத்தவுள்ளோம் என்றார்.  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, பிரச்சினைக்குரிய இடங்கள் மற்றும் பிரச்சினை நேரிடக்கூடிய நேரங்களின்போது காவல் துறையினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.




இதனை தொடர்ந்து கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் நடப்பு 2022-ம் ஆண்டில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்கவும், கொலை சம்பவங்களை தடுக்கவும், குறிப்பாக ரவுடிகள் சம்பந்தமான கொலை வழக்குகள் மத்திய மண்டலத்தில் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்க, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய மண்டல ஐ.ஜி.பாலாகிருஷ்ணன் தெரிவித்தார்.