ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.இதனால் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நேற்று நடந்தது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றதால், விற்பனை அமோகமாக இருந்தது. சிறிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.20-க்கும், பெரிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும், 1 பக்கா பொரி ரூ.20-க்கும், 1 லிட்டர் உலக்கு அவல் ரூ.60-க்கும், பொட்டு கடலை 1 லிட்டர் உலக்கு ரூ.100-க்கும், நாட்டு சர்க்கரை கிலோ ரூ.100-க்கும், திருஷ்டி பூசணிக்காய் பெரியது ரூ.150-க்கும், சிறியது ரூ.40-க்கும் விற்பனையானது. 1 டஜன் வாழைப்பழங்கள் தரத்திற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வாழைத்தார் ரூ.350-ல் இருந்து விற்பனை செய்யப்பட்டது.




மேலும் பூக்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே இருந்தது. செவ்வந்திப்பூ ஒரு முழம் ரூ.60-க்கும், கதம்பம் ஒரு முழம் ரூ.40-க்கும், மல்லிகை பூ ஒரு முழம் ரூ.60-க்கும், முல்லை பூ ஒரு முழம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.100-ல் இருந்து 160-க்கும், மாதுளை பழம் கிலோ 200-க்கும், ஆரஞ்சு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.200 வரையிலும், சாத்துக்குடி, பன்னீர் திராட்சை ஆகியவை தலா கிலோ ரூ.100-க்கும், பச்சை திராட்சை கிலோ ரூ.160-க்கும், அன்னாசி பழம் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், ஒரு தேங்காய் ரூ.25-ல் இருந்து ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராகவே நடந்தது. சரஸ்வதி படங்களும் சாலையோர கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பழைய பஸ் நிலையம் அருகே கூட்டம் அதிகளவு காணப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நேற்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை பொருட்களின் விலை நேற்றை விட இன்று(செவ்வாய்க்கிழமை) சற்று அதிகமாக இருக்கும் வியாபாரிகள் தெரிவித்தனர். 




இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் பாதி அளவு கூட நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகே வாகனங்களில் கொண்டு வந்து விற்கும் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதன் விலை குறைவு என்றாலும், அதில் தரம் இருக்காது. கடைவீதியில் விற்கப்படும் பழங்கள் தரமாக இருப்பதனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் இதனை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. முன்பெல்லாம் ஆயுத பூஜையை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள். தற்போது சாஸ்திரத்துக்கு குறைந்த அளவில் பொருட்களை வாங்கி கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆயுத பூஜை ஐப்பசி மாதத்தில் வந்தது. ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வந்துள்ளதால் ஆயுத பூஜை முடிந்தாலும் பழங்களை விற்க முடியாது. ஏனென்றால் புரட்டாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் கிடையாது என்பதால் யாரும் சுபநிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள். இதனால் கெட்டு போகக்கூடியதான பழங்களின் விற்பனை மந்தமாகும். வியாபாரிகள் நஷ்டம் அடைவார்கள். மற்ற வியாபாரமும் இது போலவே உள்ளது என்றார். 


இதனை தொடர்ந்து பூஜை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் தெரிவித்தது, ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பெரம்பலூருக்கு வந்தால் மொத்தமாக வாங்கி விடலாம். அந்த அளவுக்கு எல்லா பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்னை பொறுத்த அளவு விலை ஓரளவுக்கு அதிகமாகவில்லை என்று தெரிகிறது. பொதுமக்களும் ஆர்வமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர், என்றார். மேலும்  ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களின் விலை கடந்த ஆண்டைவிட சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறைதான் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம் என்பதால் கடன் வாங்கியாவது பூஜை பொருட்கள் வாங்குகிறோம், என்றார்.