பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுவேட்டைக்குடி கிராமத்தில் 1-வது வார்டு பகுதியான மாரியம்மன் கோவில் தெரு, கருப்பையா கோவில் தெரு மற்றும் வரகூர் சாலை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 1-வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படாததால் அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக அருகில் உள்ள 2-வது வார்டு பகுதிக்கு சென்று சைக்கிளில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். 1-வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வேப்பூர் ஒன்றிய அலுவலகத்திலும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் புதுவேட்டக்குடி 1-வது வார்டு பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை பெரம்பலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் குடிநீர் வசதி செய்து தர கோரி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். குறைகளை கேட்டு அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் 21-ந் தேதி மாலைக்குள் குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் நேற்று காலை வரை அப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.




இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று புதுவேட்டைக்குடியில் நடைபெற்ற தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடத்துடன் சென்றனர். இந்நிலையில் அப்பகுதி பெண்கள் 75-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் புதுவேட்டைக்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்று அரியலூர்-திட்டக்குடி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வசதி கேட்கும் பகுதியை பார்வையிட்டு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்ததன் பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரியலூர்-திட்டக்குடி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுக்குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது.. ஆண்டு தோறும் கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமாக உள்ளது. தண்ணீர் வேண்டும் என்றால் நெடுந்தூரம் சென்று வர வேண்டி உள்ளது. ஆகையால் தண்ணீர் தட்டுப்பாடை நிரந்தரமாக போக்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண