தமிழகத்தில் ஒருகாலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த 'பெரும்புலியூர்' தான் இன்று 'பெரம்பலூர்' ஆக மாறியுள்ளது. எங்கும் வனப்பகுதியாக இருந்த பெரம்பலூர் புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்த ஒரு இடமாகும். அதுமட்டுமின்றி அழகிய மலைகளும், மலைகள் சூழ்ந்த பகுதிகளும் இங்கு நிறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சில சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் பெரம்பலூர் ஏரிக்கு நீர் வரத்துக்காக ஜார்ஜ் வாய்க்கால் ஒன்று உருவாக்கப்பட்டது. பின்னர்,  பராமரிப்பின்றி அதன் பெரும் பகுதி அழிந்து விட்டது. இதன் காரணமாக இந்த ஏரி பகுதி சுருங்கி விட்டது. ஆனால், தற்போது வரையிலும் இந்த ஏரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நீலி அம்மன் கோவிலிலும் அருள்மிகு வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலிலும் திருவிழா காலங்களில் அநேக பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.






மேலும் அடுத்ததாக 'ரஞ்சன்குடி கோட்டை'. இந்த கோட்டை தமிழக வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோட்டை பெரம்பலூரில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும் திருச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இது வாலி கொண்டா போரில் போர் மையமாக செயல்பட்டு சந்தாசாகிப் ஐ வெற்றி பெறச் செய்தது. மேலும் 'மேல் அடுக்க கோட்டைமேடு' என்று அழைக்கப்படும் போர்க்களம் செல்லும் பாதையும் இங்கு அமைந்துள்ளது. இது பீரங்கித் தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் ஏரியை ஆழபடுத்தும் பணி நடபெற்ற போது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்த உயிரனங்களின் படிமம் கண்டெடுக்கபட்டது. ஆகையால் புவியல் ஆய்வாளர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரம்பலூர் மாவட்டம் கடல் பகுதியாக இருந்ததற்கு அடையாளமாய் பல்வேறு சிறப்புகள் இந்த பகுதியை சுற்றி கண்டெடுக்கபட்டுள்ளது என  ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.





மேலும் இங்கு நவாப் குளிப்பதற்கு என்று தனியே பிரம்மாண்ட நீச்சல் குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு என்று தனித்தனியே சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், கோட்டையில் ஓர் அரண்மனை, குடியிருப்பு பகுதிகள், சுரங்கங்கள், அறைகள், மற்றும் கோட்டைமேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சாத்தனூருக்கு தென்கிழக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரங்கள் கல் மரமாக மாறி, அதே போன்று நிறைய கல் மரங்கள் ஊர்களுக்கு அருகிலேயே காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.




மேலும் இங்குள்ள குரும்பலூர் பகுதியில் பச்சைமலை மற்றும் மூலக்காடு உள்ளிட்ட மலைகள் இயற்கை சூழ்ந்து காணப்படுகின்றது. 'லாடபுரம்' என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே அருவியான மயிலூற்று அருவி இந்த மலையில் தான் இருக்கின்றது. இந்த 'மயிலூற்று அருவி' பெரம்பலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கு மழை காலங்களில் மிகவும் செழிப்பு பெற்று அனைவருக்கும் பிடித்த ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. ராஜேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்க 'சோழகங்கம் ஏரி' என்ற ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபதுகல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும்கூட கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளது.