தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது. ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் இந்த ரேஷன் கடைகள் கூட்டுறவு தொடக்க வேளாண் சங்கங்கள் மூலம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இ்ந்தநிலையில் சமீப காலமாக மத்திய அரசு பொது வினியோகத்திற்கான ரேஷன் கோதுமை அளவை வெகுவாக குறைத்து விட்ட நிலையில் ரேஷன் கடைகளில் 20 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூட கோதுமை வினியோகம் செய்யப்படாத நிலை நீடிக்கிறது. மேலும் வினியோகிக்கப்படும் அரிசியின் தரத்திலும் அவ்வப்போது பிரச்சினைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் ரேஷன் வினியோக முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும் ரேஷன் அரிசி வினியோக மையங்களிலிருந்து கடத்தப்படுவது தொடர்கிறது. கண்காணிப்பு அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் மொத்தமாக வினியோக மையங்களில் இருந்து கடத்தப்படுவது தான் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு வழிவகுக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் நிலை உள்ளது. வினியோக மையங்களை முறையாக கண்காணித்தால் கடத்தப்படுவது வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி ஆயினும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்களை வினியோகிக்கும் நிலையில் அதனை முறைகேடாக கடத்தி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்கும் நடைமுறையை தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் சுவரொட்டிகளை பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தம், ரேஷன் கடைகள், ஊராட்சி மன்ற அலுவலகம், சுங்கச்சாவடி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவல் தெரிவிக்க பொதுமக்கள் உடனடியாக 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று அந்தந்த மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.