அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த 27ம் தேதி இரவு வானத்தில் 4 ராணுவ போர் விமானங்கள் தாழ்வாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது செந்துறை அருகே உள்ள குழுமூர், வங்காரம், அயன்தத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழுமூர் மற்றும் வங்காரம் பகுதியில் உள்ள அரசு வனக்காட்டில் பயங்கர வெடிச் சத்தம் எழுந்துள்ளது. இந்த சத்தத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டுள்ளனர். இதனால் ராணுவ விமானம் விழுந்து வெடித்து விட்டதாக வதந்தி காட்டுத் தீயாக பரவியது. அதனைத் தொடர்ந்து சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கிராம மக்களும் காட்டை சல்லடை போட்டு தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வங்காரம் காட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த தகவலின் பேரில், செந்துறை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மூன்று 108 ஆம்புலன்ஸ்களும் காட்டிற்கு வந்தது. இது வதந்தி என்பதால் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் மாலையில் ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் போட்டோவுடன் வங்காரம் காட்டில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வதந்திகளை பரப்பினர்.




இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கூறுகையில், அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூர் மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு வனக்காட்டில் இன்றைய தினம் திடீரென அதிக சத்தம் கேட்டதாகவும், இதனால் அப்பகுதியில் இதனால் அப்பகுதியில் இராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம், செந்துறையில் விமான விபத்து ஏற்பட்டதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை செய்ததில், மேற்கண்ட தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.




அரியலூர் மாவட்டம், செந்துறை உட்பட அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் விமான விபத்து ஏற்படவில்லை என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக தவறாக பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை சமூக வளைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண