கடந்த 24ஆம் தேதி அதிகாலை முதல் உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. நாட்டை காப்பதற்காக உக்ரைன் ராணுவத்தினரும் பொதுமக்களும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் குடியிருப்புகளும் தப்பவில்லை. உயிர் தப்பிப்பதற்காக உக்ரைன் மக்களும் அந்நாட்டிலுள்ள பிறநாட்டு மாணவர்களும் மக்களும் காற்றோட்டம் இல்லாத பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் நாட்டில் பணி புரிந்தும், படித்தும் வருகிறார்கள் இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு தரவேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை வலியுறுத்தி வருகிறார்.
இநிலையில் திருச்சியை அடுத்து திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்த மாணவன் சந்தோஷ் உக்ரைனில் டிப்ளமோ படித்து வருகிறார். திருச்சி திருவெறும்பூர் முல்லைக்குடியை சேர்ந்த அஜித் என்ற மாணவரும் உக்ரைனில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்மடக்கு கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் உக்ரைனில் மருத்துவப்படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சொந்த ஊராகக் கொண்டவர் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, இவர் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜேஷ், இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் அதிக அளவில் நன்கொடை கேட்பதால் ஸ்காலர்ஷிப்புடன் குறைந்த செலவில் படிப்பதற்காக உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார். ராஜேஷ் உக்ரைன் தலைநகர் கியூ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் தேர்வுகள் முடிந்து தாயகம் திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் உக்ரைனில் ராஜேஷ் உள்ள பகுதியில் போர் தீவிரமாக உள்ளதால் சுமார் 500 மாணவர்களுடன் பாதாள அறையில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் காலில் விழுந்த ராஜேசின் தாய் ஜெயலட்சுமி தனது மகனை எப்படியாவது மீட்டு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறி உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருமே பாதுகாப்பாக உள்ளதால் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.