தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்றில் இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் சனி , ஞாயிறு விடுமுறையும் தீபாவளியோடு சேர்த்து வருகிறது. இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு 6370 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியது.. சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் எனவும், நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பேருந்துகளில் பார்சல் சேவை வசதி தற்போது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே பார்சல் வசதி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனுடைய முழுமையான வெற்றியை பொறுத்து தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 16,888 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறித்து ஏற்கனவே ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்த கட்டணத்தின்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிப்பார்கள்" என்று தெரிவித்தார்.