கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். பின்னர் அவர் தென்னூர் அண்ணாநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோருக்கு ரூ.10 லட்சத்தில் கடன் உதவிகள் மற்றும் டிராக்டர் வாகனம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். மேலும் நடமாடும் வாகனம் மூலம் கூட்டுறவு வங்கி சேவை செயல்பாட்டையும் அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து கல்லுக்குழி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்ததோடு, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். பின்னர் அவர் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலும் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கே.பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தது..
இந்தாண்டு கடந்த மே 24-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தற்போது 40 நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை. இன்று 10 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 13½ லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க குடோன் உள்ளது. மேலும் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதனை சார்ந்துள்ள சங்கங்கள் மூலம் ரூ.67 ஆயிரம் கோடி வைப்புத்தொகை உள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்படுகிறது. புதிய ரேஷன் கடை கட்டும்போது கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், முதியோர் அமரும் வசதிகளோடு கட்டப்படும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரான சக்கரவர்த்தி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்ட 120 மெட்ரிக் டன் கடத்தல் அரிசியை பிடித்துள்ளோம். ஒரு வாரத்திற்கு முன்பாக 100 மெட்ரிக் டன் கடத்தல் அரிசி பிடிக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட 111 பேர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் 11,120 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறையில் உள்ள 3 ஆயிரத்து 997 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது பரிசீலனையில் உள்ளது. தற்போது மாவட்ட எல்லைப்பகுதிகளில் கேமரா வைத்து ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருள் வாங்காதவர்கள் குறித்து கணக்கு எடுப்பது, அதை ஒழுங்கப்படுத்ததானே தவிர, ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதற்கு கிடையாது. ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் கவுரவ அட்டை பெற்று கொள்ளலாம். தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் கவுரவ அட்டை பெற்றுள்ளார்கள். பயோமெட்ரிக் முறையில் (கைரேகை பதிவு செய்து) பொருள்கள் வாங்கும்போது, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகைகளை பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் சட்டத்திற்குட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.