புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், பனசக்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், ஆலங்காடு, கீழாத்தூர், மேலாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆற்றுப்பாசனம் மற்றும் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாக, இந்த ஆண்டு அதிக அளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்சமயம் இப்பகுதிகளில் அனேக இடங்களில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தற்சமயம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று பெய்த மழையால் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும், சாய்ந்தும் தண்ணீரில் மூழ்கியும் வீணாகி வருகின்றன. விவசாயிகளது நெல் மணிகளை பாதுகாக்க போதுமான தானிய சேமிப்பு கிடங்கு இல்லாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நெல் மணிகள் மழையால் நனைந்து சேதமாகி வருவதாகவும் விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர். எனவே மழையால் நனைந்து சேதமாகி போன நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய உலர்கள வசதி, தானிய சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


 



 

இதுகுறித்து வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "சமீப காலமாகவே விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தற்போது கூட இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நெல் அறுவடை செய்ய நெல் வயல்களில் தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் அப்படியே தூரோடு சாய்ந்து அழுகி வீணாகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் விவசாயம் செய்து விட்டு அதன் பலன் கைக்கு கிடைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியுள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை தான் பெரும்பாலும் நிறைவேற்ற படுவதில்லை. உலகில் உள்ள பல நாடுகளில் உணவுக்காக திண்டாடி வருகின்றனர். ஆனால் இங்கு விவசாயிகள் தாங்கள் அரும்பாடுபட்டு விளைவித்த தானியங்களை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்பு கிடங்கு மற்றும் தானியங்களை உலர்த்த மற்றும் கொட்டி வைக்கக்கூட உலர் களங்கள் இல்லாமல் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருவதாகவும், இனிமேலாவது விவசாயிகளது நிலை உணர்ந்து அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்கள்.

 




 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண