இயற்கையின் அழகு சூழ்ந்து இருக்கும் இந்த பச்சை மலையின் பல்வேறு சிறப்புகளை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.


பச்சமலை என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பச்சை பசேல் என்று அமைந்திருக்கும் இயற்கையின் அழகு, அங்கு வாழும் மலைவாழ் மக்கள், மலைத்தேன், மூலிகை வாசம் உள்ளிட்டவை தான்.


இந்த பச்சமலையின் சிறப்பம்சங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் இந்த பச்சை மலையை எவ்வாறு நாம் சென்று அடையலாம் என்று பார்ப்போம்.


திருச்சியில் இருந்து துறையூர் சென்று பின்னர் உப்பிலியாபுரம் சென்றால் அங்கிருந்து பச்சை மலையை நாம் அடைய முடியும். அதேபோன்று பெரம்பலூர் சாலையில் இருந்தும் பச்சை மலைக்கு செல்லலாம்.


இங்கே காணும் இடமெல்லாம் பசுமை போர்த்தியது போல் பச்சைப்பசேலென்ற மரங்கள், புல்வெளிகள் செடிகள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் இயற்கையால் இந்த மலை சூழ பட்டுள்ளதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் குளிர்ந்த காற்று மற்றும் செடிகளின் மூலிகை வாசனை நம் மனதிற்கு இதம் அளிக்கிறது.


மேலும், செல்லும் வழி எல்லாம் இரண்டு பக்கங்களும் பச்சை பசேல் என்று மரங்கள், பூத்துக் குலுங்கும் பூக்கள், வண்ண வண்ண பூச்சிகள், விதவிதமான பறவைகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.




மனதை மகிழ்விக்கும் இயற்கையின் அழகு..


குறிப்பாக வாகன இரைச்சல் ஏதும் இல்லாத காரணத்தால், இங்குள்ள பறவைகளும் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஒரு குளிர்ந்த மலை பகுதியாக இந்த பச்சை மலை உள்ளது.மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்ல ஆரம்பிக்கும் போது மேகங்களெல்லாம் கீழே இறங்கி, ஒரு அழகான அனுபவத்தைக் கொடுக்கும்.


மேலும், இங்குள்ள அருவிகளில் சத்தமானது ஒரு இதமான உணர்வை தருகிறது. ஓங்கி விழும் நீரின் சத்தத்தைக் கேட்கும் போதே, மனதிற்கு ஒரு நிம்மதி கலந்த மகிழ்ச்சி கிடைக்கும்.


இந்த பச்சைமலையில் மங்களம் அருவி, எருமைப்பள்ளி அருவி, மயிலூற்று அருவி, கோரையாறு அருவி எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதி, பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை. இத்தனை அருவிகளும் ஓரே மலையில் அமைந்துள்ள காரணத்தால் பச்சைமலை ’அருவிகளின் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.


மேலும் அருவியில் நீர் கொட்டும் அந்த அழகை பார்க்கும்போதே நம் மனதில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போய்விடும் போல் இருக்கும்.




இயற்கையின் அழகை ரசித்து கொண்டே இப்படி ஒரு ரிலாக்ஸான ஸ்பாட் அமைந்தால் யாருக்கு தான் பிடிக்காது. பச்சை மலையில் மங்கலம் அருவி மட்டும் அல்லாமல் எருமைப்பள்ளி அருவி, மயிலூற்று அருவி, கோரையாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளும் இருக்கின்றன. ஒவ்வொரு அறிவிக்கும் போகும்போது ஒவ்வொரு விதமான உணர்வு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


பச்சைமலை  அருவிகள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதி மட்டுமல்லாமல், இயற்கையின் உறைவிடமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.


போக்குவரத்து வசதியை மேம்படுத்த கோரிக்கை


திருச்சி மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் இங்கு ஒரு முறையாவது போய்விட வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் சாமானிய மக்களும் அங்கு செல்வது கடினமாக உள்ளது.


இருப்பினும் அரசு இந்தப் பகுதிக்கு போக்குவரத்து வசதிகளை சிறிது சிறிதாக மேம்படுத்தி வருகிறது. பச்சைமலையைச் சுற்றுலாத்தலமாக மாற்றவும் அதற்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரியும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு தான் வருகிறது.