புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடசேரிப்பட்டி கிராமத்தில் சிப்காட் அருகே திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 528 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக கடந்த ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் விடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடியிருப்பு கட்டுவதற்கான பணி தொடங்கியபோது சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கி உள்ளதாகவும் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கூடிய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை கட்ட வேண்டும் என்று கூறி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றனர். இந்தநிலையில் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒருபோதும் விட மாட்டோம் என்று கூறி பணியை தடுத்து நிறுத்தி கிராமமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்காலிகமாக பணி நிறுத்தப்படுவதாகவும் மீண்டும் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினர் நீதிமன்றத்தில் தடை ஏதும் இல்லாததால் காவல்துறையின் பாதுகாப்பை பெற்று பணி தொடங்க திட்டமிட்டு அதற்கான அனுமதியையும் வாங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு குடியிருப்பு கட்டுவதற்கான பணியைத் தொடங்கினர்.
இதனை அடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதி பயன்பெறும் வகையில் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் கட்ட மட்டுமே அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு ஒருபோதும் கட்டக் கூடாது. அவ்வாறு குடியிருப்பு கட்டும் பட்சத்தில் அங்கிருந்து வெளியாகும் கழிவு நீரால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வீடுகளுக்கு தேவையான தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் சூழ்நிலை உள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்றுகூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது பொது மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.