தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம்  வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியில்  ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், தகுதியின் அடிப்படையில் 538 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி, கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை எட்டி உதைத்தும், கால்களால் மிதித்தும் ஓடின. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் 18 மாடுபிடி வீரர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 



 

இதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட வெள்ளைநிற காளை ஒன்று நீண்ட நேரம் களத்தில் இருந்து வெளியேறாமல் அந்த பகுதியிலேயே வட்டமிட்டு நின்று கொண்டது. அப்போது மாடுபிடி வீரர்களும், காளையின் உரிமையாளரும், அவருடன் வந்தவர்களும், முன்கள பணியாளர்களும் நீண்ட நேரம் போராடி அந்த காளையை களத்தில் இருந்து வெளியேற்றினார்கள். இதனால், சிறிது நேரம் ஜல்லிக்கட்டு பாதிக்கப்பட்டது. அதேபோல, காளையின் உரிமையாளர் ஒருவர் தனது காளையை பிடித்த வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் களத்தில் இருந்த வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். போட்டி நடந்தபோது கடுமையான வெயில் அடித்தது. ஜல்லிகட்டு போட்டியை விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

 



 

மேலும் ஜல்லிகட்டு போட்டியில் காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்ற காட்சிகளை மக்கள் அனைவரும் ரசித்து பார்த்தனர். ஜல்லிகட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கபட்டது. பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள வேப்பந்தட்டை, அரும்பாவூர்,  உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அதிக அளவில் வந்ததால் அப்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அரும்பாவூர் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.