தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது. மாட்டு பொங்கல் தினமான நேற்று திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முதலாவது போட்டியாக ஜல்லிக்கட்டானது பெரியசூரியூரில் நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, அதன் முன்புள்ள திடலின் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கொரோனா பரிசோதனை 2 நாட்களுக்கு முன்பு செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் உள்ள வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். காலை 5 மணியில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அருகே வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கினர். அக்காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. 





இதனை தொடர்ந்து  ஜல்லிக்கட்டை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முதலில் வாடிவாசல் வழியாக சூரியூர் ஸ்ரீநற்கடல் கருப்பண்ணசாமி கோவில் காளை, ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் காளை ஆகியவை சீறிப்பாய்ந்து வெளியேறின. கோவில் மாடுகள் என்பதால், அவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் விட்டனர்.


கோவில் மாடுகளுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 
காளையின் அச்சுறுத்தலுக்கு பயந்த காளையர்கள், உயிர் பிழைக்க வாடிவாசல் திடலின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் ஏறி தொற்றிக்கொண்டனர். சில காளைகள், பிடி கொடுக்காமல் ஆட்டம் காண்பித்ததோடு மட்டும் அல்லாமல் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறிப்பாய்ந்தன. வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டது.




காலை முதல் மாலை வரை நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக பதிவு 480 காளைகளும், டோக்கன் இன்றி 6 காளைகளும், 254 மாடுபிடி வீரர்களுமே பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் காளையின் உரிமையாளரான திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மீனாட்சி சுந்தரம் (வயது 29), காளை முட்டி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சேர்த்தனர். ஆனால். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் மீனாட்சி சுந்தரம் உயிரிழந்தார்.


மேலும் மாட்டின் உரிமையாளர்களான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே உள்ள மங்கனூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 30), சேகர் (55), கும்பக்குடி பாலசுப்பிரமணியன் (26), லால்குடி அன்பில் ஹரிகரசுதன் (18), திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த பார்வையாளர்கள் பிரசாத் (20), நாச்சியார்பட்டி தெய்வராஜ் (55), கீரனூர் உடவயல் ராபர்ட் (34), புதுக்கோட்டை காந்தலூர் அரிஜன தெருவை சேர்ந்த சிவானந்தம் (34), குழுமணி பேரூரை சேர்ந்த சின்னான் (19), மணிகண்டம் பாகனூரை சேர்ந்த அற்புதம் (55), பெரிய சூரியூரை சேர்ந்த விழாக்குழு தன்னார்வலர் கர்ணன் (40), மாடுபிடி வீரர்கள் திருவெறும்பூர் கூத்தப்பார் கிராமத்தை சேர்ந்த அஜய் (21), திருச்சி மலைக்கோவில் பகுதியை சேர்ந்த வைரமணி (24), திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவை சேர்ந்த காஜாமுகமது (22), புதுக்கோட்டை கொழுப்பட்டி நடுத்தெரு சுப்பிரமணியன் (40) உள்பட 52 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 





ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு காலை 8.30 மணிக்கு தொடங்கி இடைவிடாது நடந்தது. பிற்பகல் 2 மணியுடன் ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதாக விழாக்குழுவினர் அறிவித்தனர். ஏனென்றால், 2 மணிவரைதான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில் 300 காளைகள்தான் களம் கண்டன. எனவே, மேலும் 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டு மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகளை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரை சேர்ந்த யோகேஷ் சிறந்த வீரராகவும் மற்றும் சிறந்த மாட்டின் உரிமையாளராக கவிக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வனும் தேர்வாக தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பெற்ற வீரர் மனோஜ், மாட்டு உரிமையாளர் ரமேஷ் ஆகியோருக்கு எல்.இ.டி. டி.வி. பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு சிறப்பு பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டன