விழுப்புரம் வண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சேவுக்கரசி. கடலூர் மாவட்டம், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 35). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் மதுரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை ஆற்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் ஓட்டி வந்தார். கார் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் ஒத்தக்கடை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரியின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் செந்தில்குமார், அண்ணாமலை, சேவுக்கரசி, வசந்தி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 



 

இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் வசந்தி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தான் அதிகமான விபத்துகள் நடக்கிறது. இதனால இந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மிகவும் அச்சமுடன் வாழ்கின்றனர். ஒரு அத்தியவாசிய தேவைக்கு கூட வெளியே செல்ல வேண்டும் என்றால் பயமாக உள்ளது என்றனர். பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டினர். ஆகையால் இனிமேல் விபத்துகள் நடக்காமல் இருக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.