சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. பல லட்சம் உயிர்களை பலி வாங்கியதோடு, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்தியாவிலும் வேகமாக பரவிய இந்த தொற்று மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகளும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் புதியதாக மரபணு உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் கர்நாடகத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, அவர்களின் மாதிரிகளை சேகரித்து ஓமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக ஒமிக்ரான் பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இங்கிலாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளிடம் மாதிரிகளை சேகரித்து முறையாக பரிசோதிக்கவும், விமான நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களில் இந்த பரிசோதனைக்கான ஏற்பாடுகளை தீவிரபடுத்தி தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனையில் யாருக்காவது நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தயார் செய்யும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அந்தவகையில், திருச்சி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வருபவர்களுக்கு 1000 படுக்கை வசதியுடன் தனி வார்டு தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.இந்நிலையில் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுவதல் ஒமிக்ரான் சிறப்பு வார்டு தயார் செய்யபட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் ‘குடிபோதை மீட்பு சிகிச்சை மையம்’ கட்டடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மூன்று தளங்களில் 32 படுக்கைகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் யாருக்காவது நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால் அவர்கள் இந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை அதிகபடுத்தவும் தயாராக உள்ளோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.