ஓ பன்னீர்செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் திருச்சியில் இன்று அளித்த பேட்டியில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசீர்வாதத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிலிருந்து தீய சக்தியான கலைஞரையும், திமுகவையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது ஆகும். இதனை தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு இந்த இயக்கத்தை திறமையுடனும், வலிமையாகவும் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆவார். அவருக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று நினைத்தவருக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கடந்த 4 ஆண்டுகாலமாக வழங்கினார். மேலும் முதலில் அதிமுகவின் சின்னத்தை முடக்க நினைத்தவர்களை எதிர்த்து போராடி மீண்டும் சின்னத்தை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா ஆவார். அதன் பிறகு மீண்டும் கட்சி சின்னத்தை முடக்கிய போது அவற்றை மீட்டெடுத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சேரும். ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருக்கிறார். ஆனால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய மகன் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுகவின் கொள்கைப்படி திமுகவிடம் யார் உறவு வைத்துக் கொண்டாலும் அவர்களை உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது தான்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கம், இந்த இயக்கத்தை யாராலும் எந்த கொம்பனாலும் அளிக்க முடியாது. கடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் இரட்டை தலைமைதான். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றை தலைமையை ஏற்று வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் ஆகும். தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வலிமையாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே தலைமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான். ஆகையால் அவர் ஒற்றை தலைமையேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம் விருப்பமாக உள்ளது. எங்களுக்கு ஒற்றை தலைமை வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.
மேலும் ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் கிடைத்த பிறகுதான் அனைவரும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள். இந்நிலையில் ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்கவேண்டும், பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுக்குழு உறுப்பினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஓ பன்னீர்செல்வம் நிச்சயமாக பாஜகவின் இணைவார். மேலும் யார் மக்களுக்கு நல்லது செய்வார், யாருக்கு மக்களுடைய ஆதரவு இருக்கிறதோ அவர்களுக்கு தான் பிரதமர் ஆதரவு. மேலும் பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை பிளவுபடுத்த நினைக்கிறார். அதிமுகவின் ஒற்றை தலைமையை அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு அவருக்கு கீழ் பணிபுரிய விரும்பினால் பன்னீர் செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு ஒற்றை தலைமை அவசியம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட தொண்டர்கள் நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம். பெரும்பான்மையான தொண்டர்கள், உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த விதத்திலும் எங்களை பாதிக்காது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்