திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல், கள்ளத்தோணியில் இந்தியா வருதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றாலும் வழக்கு முடியும் வரை சொந்த நாட்டிற்கு அனுப்பப்படாமல் சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முகாமுக்குள் இருந்தபடியே சமைத்து சாப்பிடுவதற்கும், செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு முகாமில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வருகிறது. முகாமில் உள்ளவர்களை வெளியே இருந்து குடும்பத்தினர் வந்து பார்த்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் திருச்சி சிறப்பு முகாமில் தற்போது வரை இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான், பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்பட பல நாடுகளை சேர்ந்த 143 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் விடுதலை செய்யக்கோரி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு திருச்சி சிறப்பு முகாமில் இருந்து அரசு உத்தரவின்பேரில், இலங்கை தமிழர்கள் 16 பேர் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 




இந்தநிலையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பை (என்.ஐ.ஏ.) சேர்ந்த டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் திருச்சி மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு முகாமிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையை தொடங்கினர். அவர்களின் பாதுகாப்புக்காக வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் 100 துணை ராணுவப்படையினரும் சிறப்பு முகாமில் குவிக்கப்பட்டனர். முகாமில் நுழைந்ததும், சோதனை நடத்துவதற்கான வாரண்டை காண்பித்துவிட்டு அங்கு வெளிநாட்டினர் தங்கி இருந்த அறைகள் ஒவ்வொன்றாக சென்று சோதனையிட்டனர். அவர்கள் பயன்படுத்தி வரும் செல்போன்கள், மடிக்கணினி, ஒவ்வொருவர் மீதான வழக்கு குறித்த ஆவணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டு விசாரித்தனர். இதில் குறிப்பாக இலங்கையை சேர்ந்த குணசேகரன் உள்பட 7 பேரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அப்போது திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோணியார்கோவில் தெரு பகுதியில் தங்கி இருந்த குணசேகரனின் டிரைவர் நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். விக்னேஷ் முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் உள்பட அவரது நண்பர்கள் 7 பேருக்கும் உணவு மற்றும் பொருட்களை வெளியே இருந்து வாங்கி கொடுப்பது, பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றுக்கும் உதவி செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் வீட்டில் 3 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவரையும் பகல் 1 மணி அளவில் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்தனர். 




கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் விழிஞ்சியம் அரபிக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 6 பேர் வந்த மீன்பிடி படகில் இந்திய கடலோர காவல்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புபிரிவினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த படகில் இருந்து போதைப்பொருளான 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 1,000 துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேருக்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த படகில் இருந்து ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்கள் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு உடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று பல மணிநேரம் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனையின் போது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்டவைகளை மதிப்பீடு செய்ய நகை மதிப்பீட்டாளரும் சிறப்பு முகாமிற்குள் அழைத்து செல்லப்பட்டார். மேலும், வெளிநாட்டு அகதிகள் பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ், மடிக்கணினி மற்றும் நகைகள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சியில் ஒரேநேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண