இந்திய கடற்படை எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும் மீனவர்களை படகுமீது ரோந்து கப்பலை மோதவிட்டு மீனவர்கள் படகுகள் மற்றும் அவர்களது வலைகளை சேதப்படுத்தும் அத்துமீறல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டுவருவதுடன், மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு அவர்களது படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தொடர் தாக்குதலை கண்டித்தும், சொந்த நாட்டு குடிமகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மத்திய மாநில, அரசுகள் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்தும், இலங்கை சிங்கள நிறுவனமான திருச்சி தம்ரோ பர்னிச்சர் கடையை எஸ்டிபிஐ, மே 17, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தைஅரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும், முற்றுகை போராட்டம் நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு காணப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கின்ற அரசாக தமிழக அரசின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தமிழக நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறையில் அடைத்திடவேண்டும்.
குறிப்பாக 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் சிறைபிடிப்புக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. மேலும் இதுபோன்று நிகழ்வு இனி நிகழாதவாறு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
இனிமேல் இதுபோன்று நிகழ்ந்தால் தமிழகம் முழுவதும் உள்ள இலங்கையின் நிறுவனங்கள், பொருளாதார கட்டமைப்புகள் அனைத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ன எச்சரிக்கை விடுத்தார்.
மே 17 இயக்கம் - திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசியது..
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு தற்போது இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? குஜராத் மீனவர் சுட்டுக்கொன்ற வழக்கில் பாகிஸ்தான் கப்பல் படைக்கு எதிராக பொங்கிய மோடி, இந்திய மீனவர் அதாவது தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு வாய்மூடி மௌனம் சாதிப்பதுஏன் என கேள்வி எழுப்பினார்.
இந்திய ஒற்றுமை தேச ஒற்றுமை என பேசும் பாஜக மற்றும் வீடுகள் தோறும் கொடியேற்றுங்கள் என செல்போனில் தொல்லை செய்யும் மோடி, எங்களுக்கு தேச பக்தியை கற்றுத் தர வேண்டாம் முடிந்தால் தமிழக மீனவரை கொலை செய்யும் இலங்கை கடல் படை மீது நடவடிக்கை எடுங்கள்.
தமிழக அரசு தமிழக மீனவர் ராஜ்கிரன் கொலை செய்யப்பட்டதற்கு மறு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு உயிரிழந்த தமிழக மீனவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார்.
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவது ரணில் விக்ரமசிங்கேவா? இலங்கை அரசா அல்லது இலங்கை கப்பல்படையா என கேள்வி எழுப்பினார்.
திமுக அரசு இலங்கை கடற்படையினர் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை ஆட்சி பாதிக்குமா? அடுத்தமுறை தமிழக மீனவர் கொலை செய்யப்பட்டால் அதற்கு திமுக அரசும், மத்திய அரசும் தான் காரணமாக இருக்கும்.
சிங்கள கப்பல்படை மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்யாமல் சிங்கள கப்பற்படைக்கு எதிராக போராடும் எங்களை காவல்துறையினரை வைத்து அடக்குமுறை செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.