தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த பேச்சை இன்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். அதற்கு காரணம் அவர்களுடைய முயற்சியும், அதன் பின்னணியில் உள்ள உழைப்பும் என்றே கூறலாம். ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வருவதற்கு முன்பு இருந்த தடைகள் பெரும்பாலும், தகர்த்தெறியப்பட்டதாலும், திருநங்கைகள் நிலை ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை விட மிகவும் மோசமானதாக ஒரு சில இடங்களில் வெளிப்படுகிறது. மேலும் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும், முன்னேறி செல்பவர்கள் முன்னேறி சென்று கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படி தனது உழைப்பு, திறமையால் தன் சமூக சார்ந்த முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் சட்டம் பயிலும் திருநங்கை ஜோக்கா ஜாஸ்மின் வயது (28) ஆகும். வாழ்க்கையில் உழைப்பும், திறமையும் இருந்தால் எங்கேயும், எப்போதும் சாதித்து காட்ட முடியும் என்கிறார். இதுகுறித்து திருநங்கை ஜோக்கா ஜாஸ்மின் கூறுகையில், "சொந்த ஊர் திருநெல்வேலி சங்கரன்கோவில் பகுதியில் தான் எனது குடும்பம் வசித்து வருகின்றது. நானும் அவர்களுடன் தான் வசித்து வந்தேன். 4ம் வகுப்பு படிக்கும் போதே தனது அப்பா இறந்து விட்டார். அம்மா செண்பகம் (42) அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றிக் கொண்டு வீட்டை கவனித்து கொள்கிறார். எனக்கு ஒரு அக்கா இந்திராணி திருமணம் ஆகி தாராபுரத்தில் உள்ளார். அண்ணன் வரதராஜ் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். அவர் குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.




மேலும் நான் படித்தது எல்லாமே சங்கரன்கோவில் அரசு பள்ளியில் தான். பனிரெண்டாம் வகுப்பில் பொது பொறியியல் என்ற துணைப்பாடத்தை எடுத்து படித்தேன். அதன்பின் எனக்கு பொறியியல் மீது ஆர்வம் வந்ததால் நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தேன். ஆனால் எனக்கு சட்டம் பயல வேண்டும் என்ற ஆசை இருந்ததால், எல் .எல்.பி க்கு விண்ணப்பித்து முதலாம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றேன். 2 மாத காலம் நான் வெளியே அறை எடுத்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதோடு நான் தங்கும் இடத்திலிருந்து கல்லூரிக்கு 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் செலவும் அதிகமானதால், திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்புக்கென்று ஒரு குழு இருப்பதால் திருச்சி சட்ட கல்லூரிக்கு மாறுதல் வாங்கி திருச்சிக்கு வந்து சேர்ந்தேன்.




தற்போது நான் இங்கு வந்து என்னை போன்ற சகோதரிகளோடு தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறேன். இங்கு எனக்கு செலவு குறைவு தான், கல்லூரி கட்டணம் மட்டும் தான். இங்கு என்னை போன்ற திருநங்கை சகோதரி ரியானா சூரியுடன் தங்கி சட்டம் பயின்று வருகிறேன். நான் இங்கு வந்து சேரும்போது இங்குள்ளவர்கள் , கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சௌமியா என்ற திருநங்கை பயின்று சென்றதாகவும், அதன்பின் நான் தான் இந்த திருச்சி சட்டக் கல்லூரிக்கு வரும் இரண்டாவது திருநங்கை  என்றனர். எங்களது சமூகத்தில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் வழக்கறிஞர்களே உள்ளனர். அவர்களின் ஒருவர் நீதி அரசராக இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய கனவு, லட்சியம், எல்லாமே ஒரு நல்ல சட்ட ஆலோசராக வரவேண்டும். என்னால் முடிந்த உதவிகளை என் சமூகச் சார்ந்த சகோதரிகளுக்கு செய்ய வேண்டும். அதற்கு எனக்கு போதிய சட்ட அறிவு வேண்டும் ,என்பதற்காக தான் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். இது வெறும் வார்த்தை அல்ல, எல்லாரும் நான் அந்த இடத்தை அடைந்தால் என்னை போன்றவளுக்கு உதவ வேண்டும் என்று சொல்வது வழக்கம் தான். ஆனால் அவர்கள் செய்கிறார்களா? என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் நிச்சயம் என்னால் முடிந்த உதவிகளை சட்டரீதியாகவும், சமூகம் ரீதியாகவும் செய்வதற்கு இப்போது இருந்தே பயிற்சி எடுத்துக்கிறேன்” என்றார்.