திருச்சி மேற்கு பவுல்வர்டு சாலையில் மல்டி லெவல் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. 2019 செப்டம்பரில் ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை திருச்சி மாநகராட்சி தொடங்கியது. இந்த திட்டம் ₹20 கோடி மதிப்பில் அனுமதிக்கப்பட்டு, மாவட்ட மைய நூலகத்தை ஒட்டி வாகன நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. திட்டம் செப்டம்பர் 2021 இல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை 70% சிவில் வேலைகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வேலைகளின் வேகத்துடன், இந்த வசதியை முடிக்க ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.




மேலும் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் வாகன நிறுத்துமிடம், நான்கு மாடி கட்டிடமாக இருக்கும். இது 150 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 536 இரு சக்கர வாகனங்கள் பார்கிங் செய்யும்  வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு உணவகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் உட்பட வணிக இடமும் இருக்கும். WB சாலை மற்றும் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் இல்லாமல் மிகவும் அவதிபட்டு வருகிறார்கள். மேலும் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் கட்டபட்டு வரும்  மல்டி லெவல் பார்க்கிங் பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக  இருக்கும். குறிப்பாக ஜவுளி ஷோரூம்கள் உட்பட பெரும்பாலான கட்டிடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படாததால், வாடிக்கையாளர்கள் குறுகலான மற்றும் நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 




இதனை தொடர்ந்து, நிதி நெருக்கடி மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி திட்ட செலவை அதிகரிக்க ஒப்பந்ததாரர் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. கட்டுமானத்தை விரைவுபடுத்த நாங்கள் ஒப்பந்தக்காரருக்கு உத்தரவிட்டோம், ஏப்ரல் மாதத்திற்குள் வசதியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக  அதிகாரிகள் கூறினார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த சிங்காரத்தோப்பு, மலைகோட்டை பகுதிகளில் பண்டிகை நாட்கள் மட்டும் அல்லாமல், தினம்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும். இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், “வரவிருக்கும் பண்டிகை காலங்கள் நிலைமையை மோசமாக்கும். குறுகிய சாலைகளில் இடையூறான வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்லவும் கடினமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வாகன நிறுத்துமிடம் விரைவில் கட்டப்படுவதையும், வாகனங்கள் அகற்றப்படுவதையும், மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.