தமிழகத்தில் தற்போது வறண்டு கிடக்கும் நிலங்களையும், பயன்பாட்டுக்கு உதவாத நிலப்பகுதிகளை தேர்வு செய்து, திடக்கழிவு மேலாண்மை மூலமாக கிடைக்கும் உரங்களைக் கொட்டிக் குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த சில வருடங்களில் பல்லாயிரகணக்கான ஏக்கர் நிலங்களில் இந்த குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்த குறுங்காடு திட்டத்தை மியாவாக்கி என்று அழைப்பார்கள். ஜப்பான் நாட்டின் தாவரவியல், சூழலியல் நிபுணரான அகிரா மியாவாக்கி என்பவர் தாவரங்களின் இயற்கையான வளரும் திறன், தாவர சமூகவியல் குறித்த கல்வி, அனுபவம் மூலமாக தனது பெயரிலேயே மரம் வளர்க்கும் முறையொன்றை உருவாக்கினார். அதுவே மியாவாக்கி எனும் பெயரில் குறுகிய காலத்தில் குறுங்காடுகளை வளர்க்கும் முறையாக அறியப்படுகிறது.


கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்குள் வந்த இந்த மியாவாக்கி திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் உள்ள வறண்டு கிடக்கும் நிலங்களை கண்டுபிடித்து, கணக்கீடு செய்து இதுபோன்ற குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு நடப்படும் உள்ளுர் மரங்களில் வேம்பு, புங்கள், மலைவேம்பு, மகிழம், பூவரசன், இலுப்பை, செம்மரம், பனை, மா, மாதுளை, கொய்யா உள்ளிட்ட பழ மரங்களும் உள்ளடங்கும். இந்த குறுங்காடுகள் காற்றில் ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், புவி வெப்பத்தை குறைத்து குளிர்வித்தல், மழைப்பொழிவை மீட்டெடுத்தல், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் போன்ற நன்மைகள் கிடைப்பதால், இந்த மியாவாக்கி காடுகளை உருவாக்குவதில் அரசு ஒருபக்கம் ஆர்வம் காட்டினாலும், பல தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலரும் இந்த குறுங்காடு வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.





அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அதிகாரிகளின் உதவியோடு மாவட்டத்தில் பயன்பாட்டிற்கு உதவாமல் கிடந்த 147.48 ஏக்கர் நிலத்தை கண்டறிந்து அவற்றில் உள்ள கருவேல முள் மரங்களை அகற்றிவிட்டு, அவற்றை மியாவாக்கி என்ற குறுங்காடு வளர்ப்பிற்கு தயார் செய்துள்ளார். அதில் பெரும்பாலும் லால்குடி பகுதியில் வருவதால், ஆர்டிஓ வைத்தியநாதன் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு கடந்த 2 மாதங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பூனாம்பாளையம் பகுதியில் 4.28 ஏக்கரில் 50ஆயிரம் மரக்கன்றுகளும், சமயபுரம் 0.80 ஏக்கரில் 10ஆயிரம் மரக்கன்றுகளும், இனாம்சமயபுரம் பகுதியில் 0.60 ஏக்கரில் 8 ஆயிரம் மரக்கன்றுகளும், இருங்களுரில் 14 ஏக்கரில் 1 லட்சத்து 50ஆயிரம் மரக்கன்றுகளும், கொணலையில் 13 ஏக்கரில் 1 லட்சத்து 50ஆயிரம் மரக்கன்றுகளும், பல்லப்புரத்தில் 9 ஏக்கரில் 1 லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகளும், வெங்கடாசலப்புரத்தில் 6.25 ஏக்கரில் 75ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லக்குடியில் 2 ஏக்கரில் 20 ஆயிரம் மரக்கன்றுகளும், லால்குடியில் 1.75 ஏக்கரில் 15ஆயிரம் மரக்கன்றுகளும், பிச்சாண்டவர்கோவில் பகுதியில் 13.30 ஏக்கரில் 1லட்சத்து 75ஆயிரம் மரக்கன்றுகளும், தச்சங்குறிச்சியில் 12 ஏக்கரில் 1 லட்சத்து 50ஆயிரம் மரக்கன்றுகளும், முசிறியில் 7 ஏக்கரில் 1 லட்சம் மரக்கன்றுகளும், பகளவாடியில் 2 ஏக்கரில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும் என 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்து அதனை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களே தற்போது பராமரித்து வருகின்றனர்.





தற்போது திருமணமேடு பகுதியில் 56 ஏக்கரில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த மியாவாக்கி காடுகள் உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மக்களுக்கு சுத்தமான காற்றுடன் நடைபயிற்சி செய்வதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரின் தலைமையில் இந்த இடங்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு, இந்த மியாவாக்கி காடுகளை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து ஆர்டிஓ வைத்தியநாதன் கூறுகையில், இந்த காடுகளில் நாம் 46 வகையான நாட்டு மரங்களை பயன்படுத்தி உள்ளோம். இவற்றை மிக நெருக்கமாக நட்டு வைப்பதால் சூரிய ஒளியை பெற மரங்கள் அனைத்தும் 10 மடங்கு வேகமாக வளரும், அதேபோல் 30 மடங்கு அடர்த்தியாகவும் வளரும், குறைந்த இடத்தில் அதிக மரங்கள் நடவு செய்யலாம். நெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறையும், பறவைகள், புழு, பூச்சிகள், தேனிக்கள் அதிகளவு வாழும் இதனால் உயிர்சூழல் மேம்படும், நிலத்தடி நீர்மட்டம் நிலைநிறுத்தப்படும், குறைந்த செலவில் அதிக மரங்கள் நடலாம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பராமரிப்பு தேவையில்லை என்றார்.





திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் ஊராட்சியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 400 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் பனை விதைகளை விதைத்து பனைமரக் காடு உருவாக்கும் திட்டத்தினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பனைமர விதைகளை நட்டு வைத்துள்ளோம். இந்த மனை விதைகள் பொதுவாக 6 மாதகாலம் வௌியே வளர்ந்து வருவது தெரியாது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஒரு இயற்கையான சூழலை உருவாக்கிடவும், நல்ல சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்கவும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சியை பொறுத்தவரை அமைச்சர் நேருவும், மாவட்ட கலெக்டரும் அதிகளவில் ஆர்வம் செலுத்தி இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்றார்.