தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே மழைக்கு முன்னதாக பல குளங்கள் 100 சதவீதம் நிரம்பி இருந்தன. அந்த குளங்களில் மேலும் தண்ணீர் சேர்ந்தால், அவற்றை பாதுகாப்பாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் கோட்டத்தில் 170 குளங்களில் நேற்று வரை 149 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மேலும் 13 குளங்கள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 8 குளங்கள் 51 முதல் 75 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளன. இதேபோல் தெற்கு வெள்ளாறு கோட்டத்தில் 961 குளங்களில் 9 குளங்கள் 100 சதவீதமும், 54 குளங்கள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 110 குளங்கள் 51 முதல் 75 சதவீதம் வரையும், 355 குளங்கள் 26 முதல் 50 சதவீதம் வரையும், 433 குளங்கள் 1 முதல் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளது.
மேலும் பேரூராட்சிகளில் உள்ள 62 குளங்களில் 99 முதல் 75 சதவீதம் வரை தலா ஒரு குளமும், 26 முதல் 50 சதவீதம் வரை 8 குளங்களும், 1 முதல் 25 சதவீதம் வரை 35 குளங்களும் நிரம்பி உள்ளன. 17 குளங்கள் தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதேபோல் ஊராட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் 1,522 முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 2 ஆயிரத்து 15 ஊரணிகளும் முழுமையாக நிரம்பி காணப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியில் 32 குளங்களில் பல்லவன் குளம் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 குளங்கள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 7 குளங்கள் 51 முதல் 75 சதவீதம் வரையும், 10 குளங்கள் 26 முதல் 50 சதவீதம் வரையும், 1 முதல் 25 சதவீதம் வரை 12 குளங்களும் நிரம்பி உள்ளன. அறந்தாங்கி நகராட்சியில் 7 குளங்களில் 76 முதல் 99 சதவீதம் வரை 4 குளங்களும், 51 முதல் 75 சதவீதம் வரை 3 குளங்களும் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 ஆயிரத்து 666 குளங்களில் 3 ஆயிரத்து 696 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. தொடர்ந்து மழை பெய்கையில் மற்ற குளங்களும் நிரம்பும் வகையில் உள்ளன. இதனால் நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பல்லவன் குளத்தில் தண்ணீர் நிரம்பிய நிலையில் மேலும் உபரிநீர் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மழை அதிகமாக பெய்யும் போது பல்லவன் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகே உள்ள சாந்தநாத சாமி கோயிலுக்குள் புகுந்துவிடுவது உண்டு. மேலும் தண்ணீர் வெளியேறும் கால்வாய் வழியாக பூ மார்க்கெட்டிற்குள் பாய்ந்தோடும். இதனை தவிர்ப்பதற்காக பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பான முறையில் தண்ணீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பல்லவன்குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாரி வாய்க்கால்களில் இருந்து தண்ணீரை பிரித்து அனுப்பவும், கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமையிலான அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறக்கூடிய பகுதியில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.