பேரறிஞர் அறிஞர் அண்ணா என தமிழகம் முழுவதும் போற்றி அழைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் கா.ந. அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று. அரசியல் தலைவர், தமிழ்நாடு முதல்வர் என்பதை எல்லாம் தாண்டி தனது மொழிப்புலமைக்காக பெயர்பெற்றவர் அறிஞர் அண்ணா. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் சொற்பொழிவாற்றும் அளவிற்கு திறன் கொண்டிருந்தவர். கல்லூரியில் ஆங்கிலம் படித்திருந்தாலும், அந்த காலத்தில் கல்லூரி படித்த மாணவர்கள் இடையே ஆங்கிலத்தில் பேசுவது பெரும் மோகமாக இருந்த போதிலும். ஆங்கிலத்தை விட தமிழை மிகவும் நேசித்தவர் அறிஞர் அண்ணா. ஒருமுறை, அவரது பாட்டி அண்ணாவை கொஞ்சம் ஆங்கிலம் பேசி காண்பிக்க கூறிய போது, வேண்டாம் என மறுத்துவிட்டார். ஆங்கிலம் என்பது இருவரிடையே தொடர்புகொள்ள உதவும் கருவியே தவிர, அது அறிவுத்திறனை எடுத்துக்காட்டும் அளவுகோல் அல்ல என்பதை அன்றே அறிந்தவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவின் தமிழ் மொழிக்கு தனது கதைகள், திரைக்கதைகள், பொன்மொழிகள் மூலம் பெரும்பங்கை ஆற்றியுள்ளார். அதில் குறிப்பாக ஒன்றே குலம், ஒருவனே தேவன், எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுங்கள், நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும்,
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என எண்ணற்ற பழமொழிகளை எடுத்துரைத்துள்ளார். 




இத்தகைய சிறப்புமிக்க தலைவர் அண்ணா அவர்களுக்கு இன்று 115 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது திருவுருவ படம், சிலைகளுக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திருச்சி மாநகர் சத்திரம் பேருந்து நிலையம், மேல சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நேரு பேசியதாவது:  இன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.




இதனைத் தொடர்ந்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நானும் இணைந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மகளிர்களுக்கு வழங்க உள்ளோம்.  இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பள்ளிகளை துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அதே போன்று, சேலத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளோம் என்றார்.


தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், இந்த நேரத்தில் இதைப்பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார். மயிலாடுதுறை சீர்காழியில் உள்ள அருள்மிகு சட்டநாதர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளீர்கள் என்ன வேண்டுதல் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.