திருச்சி மாநகர போக்குவரத்தில் தவிர்க்க முடியாத சாலையாக உள்ளது. கோட்டை ரெயில்வே மேம்பாலம் ஆகும். திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியையும், தில்லைநகர், உறையூர், தென்னூர் பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. திருச்சி - கரூர் ரெயில்வே மார்க்கத்தின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. 157 வருட பழமையான இந்த பாலம் வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020 மழையின் போது பக்கவாட்டு மண் சரிந்து பழுது ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்றது. ரூ.2.90 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாலம் மிகவும் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பாலத்தின் தூண்களும், பக்கவாட்டு சுவர்களும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு பிளந்து காணப்படுகிறது. கனரக வாகனத்தின் பளு தாங்காமல் பாலத்தின் மீது உள்ள சாலைகளும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.




இதன் காரணமாக ரெயில்வே நிர்வாகம், இந்த பாலத்தின் மீது போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து ரூ.34 கோடி ரூபாய் செலவில் பாலத்தை புதிதாக கட்டுவதற்கு கடந்த 2022-23 நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 50 சதவீதம் மாநகராட்சி, 50 சதவீதம் ரெயில்வே நிர்வாகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரும் கோரப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரும் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஏனோ பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. மேலும் வலுவிழந்து, பலவீனமான நிலையில் உள்ள, இந்த கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர். ஆபத்தை உணர்ந்தவர்களாய் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது என தெரிவித்தனர்.


மேலும், ஆங்கிலோர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் பலமுறை சீரமைக்கப்பட்டாலும் ,அவ்வபோது சில பள்ளங்கள் ,தடுப்புச் சுவடுகள் உடைவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரில் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான மாரிஸ் மேம்பாலம் வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே அந்த பாதையை கடந்து செல்கின்றனர். ஆகையால் உடனடியாக இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும், பெரும் விபத்துகள் நடப்பதற்கு முன்பே பணிகள் தொடங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். 




இந்நிலையில் இன்று புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது: திருச்சியில் உயர் மட்ட பாலம் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படும். உயர் மட்ட பாலம் அமைக்கலாம் என்று திட்டம் வகுத்தபோது ஏதும் இடையூரு இருக்க கூடாது என்பதற்கு தான்  மெட்ரோ நிர்வாகத்திடம்  அதற்கான தடையில்லா சான்றை பெற்றோம். மேலும்  மேரிஸ் மேம்பாலத்தை பொறுத்த வரை ரயில்வே துறையின் பங்கும் இருப்பதால் அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும். மேலும், பஞ்சப்பூரில் அமைய இருக்கும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய ஐடி காரிடார், உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வகையிலும் திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூறினார்.


சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் நிலைபாடு குறித்த கேள்விக்கு ? சப்ஜக்ட் இன் கோர்ட்  என்று கடந்து சென்றார்.