திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட பதிவு முகாம் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. மேலும் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய 7 தாலுகாக்களில் நடைபெற்ற முகாம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் முதற்கட்ட முகாமில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 539 பேர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

 

மகளிர் உரிமைத்தொகை:

 

இந்தநிலையில் 2-ம் கட்ட முகாம் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய 4 தாலுகாக்களில்  காலை தொடங்கியது. திருச்சி மாநகராட்சி, துவாக்குடி நகராட்சி, சிறுகமணி மற்றும் கூத்தப்பார் பேரூராட்சி பகுதிகள் மற்றும் அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முகாமின் முதல் நாளான நேற்று ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

 

அமைச்சர் நேரில் ஆய்வு:

 

காலை 9.30 மணிக்கு தொடங்கிய முகாம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. உணவு இடைவேளைக்கு பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. 2- ம் நாள் இன்று திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மேயர் அன்பழகன், மற்றும் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

 



 

மேலும் இந்த விண்ணப்ப பதிவின்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். ஏற்கனவே முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான தேதிகள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்பட்டிருந்தது. இது கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பதிவு முகாம்களுக்கு வந்திருந்தனர்.

 

விண்ணப்ப பதிவு முகாமுக்கு வருகை புரிந்த விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்பட்டது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையாத நிலையில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) பெறப்பட்டது. முன்னதாக விண்ணப்ப பதிவு குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1877 மற்றும் செல்போன் எண் 9384056213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு பலரும் தொடர்பு கொண்டு பேசி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண