தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும், பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார். 


இதனை தொடர்ந்து  பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் மேடையில் பேசியதாவது:


பொதுமக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் கருப்பொருளாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை மீட்பதற்கும் அதை அடைவதற்கும் நடவடிக்கையில் ஒன்றுபட்டுள்ளோம்.




தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தலைமையிலான அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்காக பல்வேறு செயல் திட்டங்கள் தீட்டி அவர்களின் முயற்சிக்கு உறுதுணை புரிகின்றது. மேலும் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளி நிலை உயர சிறப்பு கருத்தரங்கங்கள்,பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஒவ்வொரு துறையிலும் மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சம உரிமை பெற வைப்பது சமுதாயத்தின் கடமையாகும் என தெரிவித்தார். மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


மேலும் இந்த  விழாவில் 8 கிராம் வீதம், 74 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35,31,224/- மதிப்பீட்டில் தங்க நாணயங்களும், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,39,000/- மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலிக் கருவிகளும், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,84,000/- மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,52,500/- மதிப்பீட்டில் 3  சக்கர சைக்கிள்களும் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19,08,000/- மதிப்பீட்டில், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், என மொத்தம் 292 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,14,724/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் வழங்கினார்கள். 




முன்னதாக மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இசை கச்சேரி நடைபெற்றது.


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன், சமூக நல அலுவலர் நித்யா, உதவி செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.