திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஆவின் ஒன்றியம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் செயல்படுகிறது. இதில் 634 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சத்து 49 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 45 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 26 ஆயிரம் பேர் மாதாந்திர அட்டைகள் மூலம் பால் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மீதமிருக்கும் பால், கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கடந்த 2 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்காமல் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கோடை காலம் தொடங்கிவிட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக மேலும் கொள்முதல் குறைந்து ஆவின் பாலுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் பால் வினியோகம் செய்வதில் கடந்த சில வாரங்களாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கிச்செல்ல தொடங்கினர். இதன்காரணமாக ஆவின் பால் விற்பனை ஆகாமல் தேங்க தொடங்கியது.





இதனை தொடர்ந்து  நேற்று அதிகாலையிலேயே முகவர்களுக்கு வரவேண்டிய பால் பாக்கெட்டுகள், குறித்த நேரத்துக்கு வரவில்லை. இதனால் கடைகள் மற்றும் வீடுகளுக்கு குறித்த நேரத்தில் வினியோகம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நேற்று அதிகாலை 4½ மணி அளவில் பால் முகவர்கள் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ேமலும் 4 மணிக்கு புறப்பட வேண்டிய பால்வேன்கள் நேற்று காலை 7 மணிக்கு பிறகே பண்ணையில் இருந்து புறப்பட்டன. இதனால் முகவர்கள், பால் வேனை மறித்து பால் அனுப்ப வேண்டாம் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது, ஒரு வேனை தடுத்தபோது, முகவருக்கும் வேன் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், போலீசாரும் அதிகாரிகளும் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




இதற்கிடையே திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது பாலை சாலையில் கொட்டி கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, ஒரு லிட்டர் பாலுக்கு உற்பத்தியாளர்கள் சுமார் ரூ.25 வரை செலவு செய்யும் நிலையில், விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.60 மீதம் கிடைப்பதே அரிது என்ற நிலை உள்ளது. தீவனங்களின் விலை உயர்வு, மாடுகள் பராமரிப்பு என அதிக செலவுகள் உள்ள நிலையில், பால் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ.33.50-ஐ அரசு கொடுப்பது போதாது. எனவே கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும். இதற்கு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, பழனிசாமி, சேசுரெத்தினம் உள்பட 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 60 பேர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.