தமிழ்நாட்டில் மாநகரங்களில் ஏற்பட்டு வரும் ஒட்டு மொத்த வளர்ச்சியில் போக்குவரத்து துறை பங்கும் முக்கியமானது ஆகும். அதனை கருத்தில் கொண்டு மாநகர வளர்ச்சியில் பொது போக்குவரத்தின் பங்கை மேம்படுத்தும் வகையில் திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ, மெட்ரோ லைட், மெட்ரோ நியோ, பிஆர்டிஎஸ் போன்ற அதி விரைவு போக்குவரத்து திட்டங்களை ( மாஸ் டிரான்ஸிட் அமைப்பு) செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்தது. 


குறிப்பாக இரண்டாம் நிலை மாநகரங்களில் ஒன்றான திருச்சி தமிழ்நாடின் 4வது பெரிய நகரமாகவும், மாவட்ட தலை நகரமாகவும் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் திருச்சி மாநகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.


அதன்படி, மாநிலத்தில் ஒரு மையமாக செயல்படும் திருச்சி நகரம் மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. புகழ்பெற்ற மத மற்றும் சுற்றுலாத் தலங்கள் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.


மேலும், திருச்சி மாவட்டத்தின் மக்கள்தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. ஆகையால் மாநகரை ஒட்டி உள்ள முக்கிய பகுதிகள் விரிவாக்கம்,  மற்றும் மாநகராட்சி விரிவாக்கம் செய்த பின்னர், அடுத்த சில ஆண்டுகளில் மாநகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.




திருச்சியில் மெட்ரோ ரயில் பணி தொடங்குவதில் சிக்கல்...


அதனால் எதிர்கால பொதுப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டும், மாநகரில் நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத போக்குவரத்து அமைப்பு கொண்ட நிலையை உருவாக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் அதற்கான மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைப்படி, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இப்பணிக்காக ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குவதற்கான பூர்வீக பணிகள் குறித்து திருச்சி மாநகரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதேசமயம் திருச்சி மாநகரில் புதிதாக அமைய உள்ள உயர்மட்ட பாலத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டது.


இந்நிலையில் திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் வழித்தடங்களில், உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளதால் இதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மெட்ரோ ரயில் பணிக்கான மண் பரிசோதனை செய்து அதன் அறிக்கையை விரைவில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.




திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சாத்தியமில்லை


திருச்சி மாநகரில் புதிதாக அமைய உள்ள மேம்பாலத்திற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான நிதியும் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் தொடங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது என தகவல்கள் பரவியது.


மேலும் இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்  கூறியது.. 


திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதியாக உள்ளனர். 


திருச்சி மாநகரை பொறுத்தவரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு திருச்சியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவதற்கான அனுமதி இதுவரை அளிக்கவில்லை. 


ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் திருச்சியில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 


ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்காத வரை, திருச்சியில் மெட்ரோ ரயில் பணி திட்டம் தொடங்குவது என்பது சாத்தியமில்லை என தெரிவித்தார்.